அவியல் – சமையல் குறிப்பு – சமையல் பகுதி – Recipe – மகளிர்ப் பகுதி
தேவையான பொருட்கள்
- தேங்காய் = 1 மூடி (தேங்காய் அதிக முற்றலாக இருக்கக் கூடாது.)
- கருணைக்கிழங்கு = 150 கிராம்
- பச்சை மிளகாய் = 6 (காரம் குறைந்த மிளகாயாக இருந்தால் 8)
- முருங்கைக் காய் = 2
- வாழைக்காய் = 1
- கத்திரிக்காய் = 100 கிராம்
- கொத்தவரங்காய் = 100 கிராம்
- பீன்ஸ் = 100 கிராம்
- உருளைகிழங்கு = 3
- பெரிய வெங்காயம் = 2
- மாங்காய் = புளிப்பு இல்லாத ஒட்டுக்காய் பாதி அளவு
- புளி = 25 கிராம்
- கறிவேப்பிலை = சிறிது
- சீரகம் = 1/2 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் = 1/2 மேசைக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் = 3 மேசைக்கரண்டி
- உப்பு = தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் எல்லாக் காய்கறிகளையும் நன்றாக கழுவி எடுக்கவும். கழுவிய காய்களை நீள, நீளமாக அரிந்து கொள்ளவும்.
- பச்சைமிளகாயையும், மாங்காயையும் நீளவாக்கில் கீறி, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில், வெங்காயத்தை அரிந்து, அரிந்து வைத்த காய்கறிகளுடன் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூளையும் சேர்த்து போட்டு வேகவிடவும்.
- தேங்காயுடன் சீரகத்தையும் சேர்த்து அதிகம் மசிந்துவிடாதபடி அரைத்து, விழுதை எடுப்பதற்கு சற்று முன்பு, கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து எடுக்கவும். (குறிப்பு: கறிவேப்பிலை ஒன்றிரண்டு துண்டுகளாக இருந்தால், அவியல் நல்ல மணத்துடன் இருக்கும்.)
- வெந்துகொண்டிருக்கும் காய்கறியுடன், தனியாக அரிந்து வைத்த ப.மிளகாயையும் மாங்காயையும் போடவும். புளியை அதில் கரைத்து ஊற்றவும். உப்பையும் அதனுடன் போட்டு கரண்டியை திருப்பி அதன் கைப்பிடி பகுதியால் காய் குழையாதவாறு கிளறிவிடவும்.
- காய் வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து அதில் போட்டு கிளறவும்.
- தண்ணீர் அதிகமாகாதவாறு கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும். அவியல் கெட்டியானவுடன் இறக்கி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி வைக்கவும்.
இப்போது சுவையான, அவியல் தயார்.
Be the first to comment