பாப்பா பாட்டு – பாராதியார் கவிதை
ஓடி விளையாடு பாப்பா, – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.
பாலைப் பொழிந்துதரும், பாப்பா, – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.
வண்டி இழுக்கும்நல்ல குதிரை, – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.
காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.
மகாகவி ஒரு சகாப்தம். அலைபேசியுடனும் இணையத்திலும் தனியாக விளையாடி கொண்டிருக்கும் இன்றைய குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உணர வேண்டிய வரிகள்… காலம் பாரதியை பிரித்தாலும் அவர் வரிகள் நிலையானவை.
குறைக்கடத்தியாலான மின்னணுக் கருவிகள் கற்றுக் கொடுக்கும் பாடத்தை விட, குழந்தைகளுக்கு இயற்கை கற்றுத் தரும் பட்டறிவு அளவிட முடியாதது. இதைச் சென்ற நூற்றாண்டிலேயே, பாரதியார், பாரதிதாசன் போன்ற புரட்சிக்கவிகள், முக்காலதையும் நன்கு அறிந்து நமக்கு வலியுறுத்திக் கூறியுள்ளனர்.