அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன்அழீஇப் பொய்த்து நகை. – குறள்: 182
- அதிகாரம்: புறம் கூறாமை, பால்: பொருள்
கலைஞர் உரை
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது; அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.
தேவநேயப் பாவாணர் உரை
ஒருவனைக் காணாவிடத்துப் பழித்துரையால் அழித்துக் கூறி, கண்டவிடத்து அவனோடு பொய்யாகச் சிரித்து முகமலர்தல், அறம் என்றே ஒன்றுமில்லையென அழித்துக்கூறி அறமல்லாதவற்றைச் செய்தலினும் தீயதாம்.
மு. வரதராசனார் உரை
அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்தலைவிட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
Be the first to comment