டார்சி லின்-னின் (Darci Lynne) மாற்று-ஒலிமூலத்தோற்றக் கலை (வென்ட்ரிலாக்விசம்) – The Art of Ventriloquism
டார்சி லின் (Darci Lynne) மாற்று-ஒலிமூலத்தோற்றக் கலையில் (வென்ட்ரிலாக்விசம் – Ventriloquism) தனிச்சிறப்புடன் விளங்குகிறார். அவர் தனது பன்னிரெண்டாவது வயதில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற என்.பி.சி. (NBC) தொலைக்காட்சியின் அமெரிக்காவின் திறனாளிகள் போட்டியில் (America’s got Talent – Season 12) முதல் பரிசாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை (இன்றைய மதிப்பில் ஏறத்தாழ ரூபாய். ஏழு கோடியே பதினேழு லட்சம்) வென்றார்.
வென்ட்ரிலாக்விசம் (Ventriloquism), அதாவது மாற்று-ஒலிமூலத்தோற்றக் கலை என்பது ஒருவர் தனது உதடுகளை அசைக்காமல் பேசி, வேறு ஒரு இடத்திலிருந்து அவர் பேசும் ஒலி வருவது போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குவது ஆகும். உதாரணமாக, இந்தக் கலைஞர்கள், அவர்களது உதடுகளை அசைக்காமல், ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு, அதன் வாயை அசைத்துக் கொண்டு, அது பேசுவது போல், அவர்கள் பேசுவார்கள். பார்வையாளர்களுக்கு, பொம்மை பேசுவது போல் தோன்றும்.
பெட்டுனியா (முயல் பொம்மை), ஆஸ்கர் (எலி பொம்மை), எட்னா (மூத்த பெண் பொம்மை) ஆகிய பொம்மைகள் தான் அவரது மாற்று-ஒலிமூலத்தோற்றக் கலை நண்பர்கள். டார்சி லின் பொம்மைகளைக் கொண்டு பேசுவது மட்டுமல்ல. பல விதமான குரல்களில் பாடுவதிலும் சிறந்து விளங்குகிறார். இந்தப் பொம்மைகள் அவரது கலை நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கின்றன. அவர் அமெரிக்காவின் பல பகுதிகளில் இந்த அரிய கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
டார்சி பொம்மைகளைக் கொண்டு ஒரு சிறு இசை நாடகமே நிகழ்த்துகிறார். தானும் ஒரு கதைப் பாத்திரமாக நடித்துப் பேசுவதுடன், பொம்மைகளை கைகளால் இயக்கிக்கொண்டே, அவற்றிற்கு பல விதமான குரல்கள் கொடுத்து, உதடுகளை மூடிப் பேசுவதுடன், பாடியும் அரங்கில் இருக்கும் பார்வையாளர்களை மகிழ்வூட்டுகிறார்.
டார்சி, பெட்டுனியா என்ற முயல் பொம்மையுடன் பேசிப் பாடும் கீழ்க்கண்ட காணொளியைச் சொடுக்கிப் பாருங்கள்:
ஆஸ்கர் எனப்படும் எலிப் பொம்மையை வைத்துக் கொண்டு அவர் பாடும் கீழ்க்கண்ட காணொளியைப் பாருங்கள். வாயை மூடிப் பேசுவதே கடினம்; அதிலும் இவர் இப்படிக் குரலை மாற்றிப் பாடுவது அந்த அரங்கத்தையே அதிர வைக்கிறது.
சில நிகழ்ச்சிகளில் ஒரே நேரத்தில் மூன்று விதமாகப் பாடுகிறார் டார்சி லின். தான் பாடுவதுடன், உதடுகளை மூடி, இரண்டு பொம்மைகள் பாடுவது போலவும் பாடுகிறார்.
Be the first to comment