இசைஞானியின் குழலும் குரலும் (Flute and Voice – Ilaiyaraaja)
நம் இசைஞானியின் மெட்டுக்கள் அனைத்தும் நம் செவிகளுக்கு விருந்தளித்து, நம்மை மயக்கக் கூடியவை என்பது நம் அனைவரும் அறிந்ததே. அவற்றில் சில மெட்டுக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் சிறப்புப் பண்புகளைப் பற்றி சென்ற பகுதியில் (இசை = இளையராஜா = இசை: பகுதி-1) பார்த்தோம். இந்தப் பகுதியில் (பகுதி-2) இசைஞானியின் சிறப்புகள் பற்றியும், அவர் குரலில், பாடி நம்மை மகிழ்வித்த ஒரு சில பாடல்களைப் பற்றியும் பார்ப்போம்;
இசைஞானி (Maestro) – வான் சிறப்பு
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. – குறள்: 12
வான் சிறப்பு எனும் அதிகாரத்தில், திருவள்ளுவர் மழையின் பெருமையை இவ்வாறு கூறுகிறார். இதன் விளக்கம்:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
இந்தக் குறள் வான் மழைக்கு மட்டும் அல்ல; நம் இசைஞானியின் இன்னிசை மழைக்கும் மிகப் பொருத்தமாக அமையும். நம் ராஜாவின் இன்னிசை மழை, நமக்கு மகிழ்ச்சியை கொடுப்பது மட்டுமின்றி, நம் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் நம் உணர்வோடும் உயிரோடும் கலந்துள்ளது.
தனித்துவம் (Uniqueness)
நாற்பது ஆண்டுகளுக்கும் மேல், அவர் இசை அமைக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும், திரைப்பாடலிலும், அல்லது ஆல்பத்திலும் புத்தம் புது இசையை நமக்கு உருவாக்கிக் கொடுக்கிறார். ஆண்டாண்டுகளாக, அன்று முதல் இன்று வரை, பல தலைமுறைளும் ரசிக்கும் வண்ணம்,
- நுணுக்கமான;
- துல்லியமான;
- இனிமையான;
- கவிதை வரிகளுக்கு அழகிய உருவம் கொடுக்கக் கூடிய;
- புதுப்பொலிவு மிக்க …
தனித்துவம் வாய்ந்த, என்றென்றும் தெவிட்டாத மெட்டுகளைத் தருகிறார். அள்ள அள்ள, குறையாமல் உணவைக் கொடுத்துக் கொண்டே இருக்கும் அமுத சுரபியைப் போல், இசையை அள்ளி அள்ளி நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார் நம் ராஜா. அதனால் தான் இவர் இசையை வான் மழைக்கு நிகராகச் சொன்னாலும் அது மிகையாகாது.
உலக இசைக் கருவிகள் (Musical Instruments)
அவர் விரல் படாத இசைக் கருவியும் இந்த உலகில் இருக்குமா என்றால் அது மிகை ஆகாது. அவரது பாடல்களையும், பிண்ணனி இசையையும் கேட்கும் போது இது நமக்குப் புரியும்.
பிறப்பால் ஞானி (Born Genius)
அவர் இசைப் பயணத்தைத் தொடங்கிய சிறு வயது முதல் இன்று வரை அவர் இசையைப் பற்றி அவர் நினைக்காத நொடி என்று ஒன்று இருக்குமா? அதனால் தான் நாம் வியந்து கேட்கும் ஒவ்வொரு அரிய இசைப் படைப்பையும், வடிவமைக்க சில நொடிகள் அல்லது நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார் போலும்.
படைப்புகள் (Creations)
மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் அனைத்திற்கும் சான்றாக, ஓர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள், ஆறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், மற்றும் அவருடைய படைப்புகளுக்கு மணிமகுடமாக அமையும் ஆல்பங்களான ரமண மாலை, திருவாசகம், ஹவ் டு நேம் இட் (How to Name It?), நத்திங் பட் விண்ட் (Nothing But Wind) … என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
திரை அரங்குகளில், படத்தின் தொடக்கத்தில், நடிகர்கள் மற்றும் படக் குழுவினர்களின் பெயர்கள் வெள்ளித்திரையில் வரும்போது, பெயர் பெற்ற நடிகர்களின் பெயர்களைப் பார்த்து ரசிகர்கள் கர ஒலி / விசில் ஒலி எழுப்புவதைப் பார்த்து இருப்போம். ஆனால், திரைப்பட வரலாற்றிலேயே இசை அமைப்பாளருக்கு, ரசிகர்கள் ஆரவாரத்தோடு திரை அரங்கின் எட்டு திக்கும் ஒலிக்கும்படி கர ஒலி / விசில் ஒலி எழுப்புவார்கள் என்றால், அது நம் இசைஞானிக்குத் தான் முதன் முதலில் அப்படி நிகழ்ந்தது.
துள்ளி எழுந்தது பாட்டு (படம்: கீதாஞ்சலி, ஆண்டு: 1985)
எந்தச் சலனமும் இல்லாத அமைதியான நீர் நிலையில், ஒரு துளி கனமான மழைத்துளி, அதுவும் முதல் துளி விழுந்தால், அது எப்படி ஒரு துள்ளல் ஒலியுடன் சட்டென துள்ளித் தெறிக்குமோ, அதுபோல் ஒரு அழகிய கிட்டாரின் துள்ளிசையுடன் துவங்கும் இந்தப் பாடல் என்றென்றும் தெவிட்டாத ஒரு தீஞ்சுவைப் பாடல்.
- இப்பாடலில் பல சிறப்புத் தன்மைகள் உள்ளன. ஒற்றைத் துளி கிடார் ஒலியுடன் தெறித்துக் கிளம்பி, பாடலின் முதல் 12 நொடிகளுக்கு கிடார் மட்டுமே தனித்து இன்னிசை ஆளுமை செய்யும். அமைதியான அந்தச் சூழலில், கிட்டார் சட்டென்று, மௌனத்தைக் களைத்து, துள்ளிசையை எழுப்பும்; அதைத் தொடர்ந்து, நாயகியின் மனதை எதிரொளிக்கும் விதமாக, எந்த சலனமும் இன்றி, தனக்கே உரித்தான மென்மையான குரலில் முதல் 4 வரிகளை சித்ரா அழகாகப் பாடுவார்.
துள்ளி எழுந்தது பாட்டு..
சின்னக் குயிலிசைக் கேட்டு.
சந்த வரிகளப் போட்டு..
சொல்லிக் கொடுத்தது காற்று.
இதைத் தொடர்ந்து இளையராஜா, நாயகனின் உணர்வை வேறு ஒரு கோணத்தில் வெளிப்படுத்தும் விதமாக, இதே பாடல் வரிகளை, வெண்கல மணியில் இருந்து வரும் கணீர் ஒலி போன்ற குரலோடு பாடத் துவங்குவார். இந்தப் பாடலின் சிறப்புத் தன்மையே, நாயகனும் நாயகியும் துள்ளிக் கொண்டு பாட நினைக்கும் மன நிலையை அந்த கிடாரின் ஒலியானது, பாடலின் துவக்கத்திலேயே, துள்ளி எழுந்து ஒப்புமை காட்டுவதுதான்.
- இப்படிப் பட்ட இனிமையான பாடலில், குழலிசை இல்லாமல் இருக்குமா? மனதை மயக்கும் அழகிய குழலிசை நம் மனதை கொள்ளை அடித்துச் செல்லும். இதன் பின் குழலுக்கு பதில் நம் ராஜாவின் குரல் தொடர்ந்து பாடல் முழுவதும் வரும்.
- அழகிய பாடல் வரிகளைக் கொண்ட இந்தப் பாடலின் பிண்ணனியில், பாடல் முழுவதும் வரும் கிடார் இசையும், பாடலுக்குத் துணையாக வரும் அடிப்படைத் தாள இசையும் மனதை வருடும்.
- ” உயிரே ஒரு வானம்பாடி… உனக்காக கூகூகூ…வுது” எனும் வரியில், கூவுது எனும் சொல்லைக் குயில் போலக் கூவிக் கொண்டே நெடிய ராகத்துடன் பாடுவார். அதில் “கூ” என்ற எழுத்துக்குத் தகுந்த முக்கியத்துவம் அளிப்பார்.
- பொதுவாக, ஒருவர் தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், நம் இசைஞானியின் குரலில் பாடிய பாடல்களைக் கேட்டாலே போதும். வல்லினம், இடையினம், மற்றும் மெல்லின எழுத்துக்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை இவர் உச்சரிப்பிலேயே தனித்தனியாக பிரித்து உணர முடியும். தமிழுக்கு அழகு “ழ” என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதை நம் இசைஞானி பாடும்போது, அவர் உச்சரிப்பைக் கேட்டுப் பாருங்கள். அதன் அழகு பல மடங்கு அதிகரித்து, அந்த அழகிய “ழ” வுக்கே இன்னும் அழகு சேர்த்தது போல் இருக்கும். அவ்வளவு தெளிவாகவும், அழகாகவும் பாடுவார். இந்தப் பாடலைக் கேட்டவுடன் அது நமக்குப் புரியும். உச்சரிப்பு மட்டுமின்றி, அந்த சொல்லின் பொருளை, பிண்ணனி இசையின் மூலமாகவும் வெளிப்படுத்துவார். இதனை அவர் “அழகே புது ஆசை வெள்ளம்.. அணை தாண்டித் தா..வுது..” என்ற வரியைப் பாடும் போது கவனித்தால் உணர முடியும்.
- “ மாலை முதல் ….. காலை வரை….. ” என வரும் வரியில், முதல் பகுதியை, மாலை முதல்ல்ல்….. என நீண்ட ராகத்தோடு பாடுவார். இப்படி, மாலை நேரத்திற்கும் காலை நேரத்திற்கும் இடைப்பட்ட நீண்ட கால அளவை, அவர் குரலோசையிலேயே உணர்த்திவிடுவார்.
- அடுத்து, இதே பாடலில், ” நான் தேடிடும் ராசாத்தியே….. ” எனும் வரியில் பிண்ணனியில் ஒரு சிறு மாயம் செய்து இருப்பார். இந்த வரிக்கு உருவம் கொடுக்க, சில நேரங்களில், அமைதியான இடத்தில், உண்மையாகவே தேடிக் கூவி அழைக்கும் போது, லேசான எதிரொலி இருக்குமே. அதே போன்ற உணர்வைக் கொடுக்க, “நான் தேடிடும் ராசாத்தியே…” என்று அவர் பாடும் போது, பிண்ணனியில், லேசான எதிரொலியைக் கொடுத்து இருப்பார்.
- எழுத்துக்கள் மற்றும் சொற்களைப் பாடலின் ராகத்திற்கேற்ப, எவ்வளவு நீட்டிக்க வேண்டும் என்று துல்லியமாக கணித்து வைத்து இருப்பார். இப்படி, பாடலின் ஒவ்வொரு எழுத்தையும், சொல்லையும், நுணுக்கமான முறையில் செதுக்கி எடுத்து, அப்பாடலை இன்னும் மெருகேற்ற, துல்லியமான, அழகிய பிண்ணனி இசையை அப்பாடலை விட்டு சற்றும் விலகாத வண்ணம் பிண்ணிக் கோர்த்து இழைத்து இருப்பார்.
- மெட்டுக்குப் பாட்டா, இல்லை பாட்டுக்கு மெட்டு போடுகிறாரா என்று நம்மால் வித்தியாசம் காண முடியாத அளவுக்கு வடிவமைத்து இருப்பார்.
இவ்வளவு நுணுக்கமான இசையை வடிவமைக்க இவருக்கு சில நொடிகளே போதும். இத்தகைய விந்தையை, இவர் இப்பாடலுக்கு மட்டும் அல்ல; அனைத்து பாடல்களுக்கும் செய்கிறார்.
பூமாலையே தோள் சேரவா… (படம்: பகல்நிலவு, ஆண்டு: 1985)
பொங்கி வரும் புது வெள்ளம் போல் மகிழ்ச்சி கொண்ட நாயகன் மற்றும் நாயகியின் மனதை எதிரொளிக்கும் விதமாக, வளமான வயலின் இசையுடன் தொடங்கும் இந்தப் பாடல் இசைஞானியின் அரிய படைப்புகளில் ஒன்று.
வயலின் மழையைத் தொடர்ந்து, குழலிசை, அதை அடுத்து இனிமையான எஸ். ஜானகியின் குரலுடன் தொடங்கும் இந்தப் பாடல், இன்றும் ஒரு புதுமையான பாடல்.
பொதுவாக அனைத்து பாடல்களிலும், ஒரு பாடகர் ஒரு வரியைப் பாடி முடித்த பின், அடுத்த வரியை அடுத்த பாடகர் பாடுவார். உதாரணமாக, கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளது போல், முதல் வரியைப் பெண் குரல் பாடி முடித்த பின், ஆண் குரல்; அதன் பின், பெண் குரல்; அதற்குப் பிறகு ஆண் குரல்; என்று தொடர் வரிசையில் மாறி மாறி அமைந்து இருக்கும். பொதுவாக இப்படி அமைவது ஒருவரின் கருத்துக்கு மற்றொருவர் பதில் கூறுவது போல் அமையும்.
ஆனால், “பூமாலையே தோள் சேரவா…” எனத் தொடங்கும் இந்தப் பாடலில், நாயகனும் நாயகியும் ஒருமித்த கருத்தைக் கொண்டு இருப்பதால், ஒரு பூவை எடுத்து இன்னொரு பூவுடன் தொடுத்து மாலையை உருவாக்குவதைப் போல், எஸ். ஜானகியின் குரலும், இளையராஜாவின் குரலும் இணைந்து ஒலிக்கும். அதாவது, கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளதைப் போல், ஜானகியின் குரல் ஒரு வரியைப் பாடி முடிக்கும் முன்னரே, அவரோடு சேர்ந்து, இளையராஜா பாடத் தொடங்குவார். பின், இளையராஜா அடுத்த வரியைப் பாடி முடிக்கும் முன்னரே அவரோடு சேர்ந்து, ஜானகி பாடுவார்.
இதில் அழகே, இரண்டு பேரும் சேர்ந்து பாடும் போதும், அவர்கள் குரல்கள் தெளிவாக கலக்கப்பட்டு, தெளிவாக அவர்கள் குரல்களை கேட்டுணரும் வகையில் இப்பாடல் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்தப் பாடலின் அழகை விவரிப்பது கடினம். இதைக் கேட்கும்போது தான், இப்பாடலின் சிறப்பு நம்க்கு நன்றாகப் புரியும்.
கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி… (படம்: வண்ண வண்ணப் பூக்கள், ஆண்டு: 1992)
காதலியிடம் பிள்ளைத் தமிழில் காதல் கவிதைக் கேட்கும் நாயகனுக்கு, கிள்ளை மொழியில் நாயகி கவிதை பாடுகிறாள். இந்தச் சூழல் அமைந்த பாடலை, ஒரு பிரம்மாண்டமான தொடக்க இசையுடன், இசைஞானி பாடலின் சூழலுக்கு ஏற்ப, கொஞ்சும் தமிழில் பாடுவார். இப்பாடலைப் பாடும்போது,
உந்தன் கிள்ளை மொழியினிலே..
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்?
துள்ளித் துள்ளி வரும் நடையில்,
மனம் மெல்லத் துடிப்பதும் ஏன்?
உன்னை காண வேண்டும்… கூட வேண்டும்…
வா..ராயோ… வா…ராயோ…
இதில் வா..ராயோ… வா..ராயோ… எனும் வரியைப் பாடும் போது, ஒரு குழந்தையை அழைப்பது போலவே, ராஜா கொஞ்சலுடன் அழைப்பார். ஜானகியும், ராஜாவின் கொஞ்சும் தமிழுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அழகாகப் பிள்ளைத் தமிழில் பாடி இருப்பார்.
இதயம் ஒரு கோயில் … (படம்: இதயகோயில், ஆண்டு: 1985)
மனம் உருகிப் பாடும் பாடல் என்று சொல்லக் கேள்விப் பட்டிருப்போம். இப்பாடலைக் கேட்கும் போது, இசைஞானி மனம் உருகிப் பாடுவதை மட்டும் அல்ல; நம் மனதையும் சேர்த்து இப்பாடல் உருக்குவதையும் நாம் உணரலாம். இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு… இசையே வடிவான இந்தப் பாடலை இசைஞானியே எழுதியுள்ளார்!!
குறிப்பு: இப்பகுதியில், விவரிக்கப்பட்ட பாடல்களைப் பற்றி, படித்த பின், அமைதியான சூழலில், இப் பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். இப்பாடல்களைக் கேட்க கீழ்க் கண்ட இணைய முகவரிகளைப் பாருங்கள்:
இசைஞானியின் இசைக் கருவூலத்திலிருந்து இதோ இன்னும் ஒரு புதையல் நமக்குக் கிடைத்துள்ளது.
- இளையராஜாவின் அதிகாரப்பூர்வ யூடுயூப் (Official Youtube Channel of Ilayaraaja) பக்கத்தைக் காண இந்த முகவரியை க்ளிக் செய்யவும் அல்லது தொடவும்.
- இசைஞானி தனது அதிகாரப்பூர்வ யூடுயூப் (Official Youtube Channel) பக்கத்தை வெளியிடும் வீடியோவைக் காண இந்த முகவரியை க்ளிக் செய்யவும் அல்லது தொடவும்
- இசைஞானியின் இணையதள முகவரி
- துள்ளி எழுந்தது பாட்டு (படம்: கீதாஞ்சலி, ஆண்டு: 1985)
- பகல்நிலவு
- கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி… (படம்: வண்ண வண்ணப் பூக்கள், ஆண்டு: 1992)
- இதயகோயில்
இசைஞானியின் குரலில் அமைந்த இன்னும் பிற பாடல்களைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம். தொடரும்…
இசை மயமான கட்டுரை. இதனை படிக்கும் போது இசைஞானியின் பாடல்கள் நம் மனதில் ஒலிக்கின்றன. ஓவ்வொரு வரிகளையும் ஆசிரியர் நன்கு அனுபவித்து எழுதியுள்ளார். நம்மையும் அனுபவிக்க செய்திருக்கிறார். இனி இப்பாடல்களை கேட்கும் போது இசைஞானியுடன் இக்கட்டுரையும் நினைவுக்கு வரும். அழகிய பதிவிற்கு நன்றி.
மிக அருமையான கருத்து. கட்டுரையைப் படித்து, உணர்ந்து உங்கள் கருத்தைத் தெரிவித்ததற்கு மிக்க நன்றி.