இசைஞானியின் இசைமாலை (Maestro’s Music Spectrum): இசை = இளையராஜா : பகுதி 3

Maestro's Music Spectrum

இசைஞானியின் இசைமாலை: இசை = இளையராஜா : பகுதி 3 (Maestro’s Music Spectrum)

இசைஞானியின் குரலில் பாடிய பாடல்களில் சில பாடல்களைப் பற்றி சென்ற பகுதியில் (குழலும் குரலும்: இசை = இளையராஜா: பகுதி-2) பார்த்தோம். இந்தப் பகுதியில் அவர் பாடிய இன்னும் சில பாடல்களைப் பற்றிப் பார்ப்போம். அதற்கு முன் அவர் படைப்புகளின் சிறப்புகள் (Maestro’s Music Spectrum) பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

நிறமாலையைப் (Spectrum) பார்த்தவுடன் சில வண்ணங்கள் நம் கண்களுக்குப் புலப்படும். உதாரணமாக வானவில்லின் ஏழு வண்ணங்களைக் கூறலாம். ஆனால், நிறமாலையை நுணுக்கமாகப் பிரித்து ஆராய்ந்து பார்த்தால் அதிலிருந்து பல மில்லியன் வேறுபட்ட நிறங்களைப் (Color Variants / Color Shades) பிரித்து எடுக்கலாம். அதுபோல், எண்ணிலடங்கா இசை வடிவங்களைத் தனித்தனியே பிரித்து எடுத்து, பல புதுமையான படைப்புகளை நமக்கு அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கிறார் நம் இசைஞானி.

1976-ல் அன்னக்கிளி வெளியானது முதல், இசைஞானியின் இசைப்பொற்காலத்தில் நாம் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.  இசைஞானியின் இசை, காலத்தின் போக்கில் (Trend) செல்லாது. ஆனால், காலத்தை தனது தனித்துவம் மிக்க இசையால், அவர் வசம் சுண்டி இழுத்து விடுவார் (Trendsetter). ஒவ்வொரு கால கட்டத்திலும்,  வெளி வந்த இசைஞானியின் பாடல்களுக்கும், பிண்ணனி இசைக்கும் ஒரு தனித்துவம், சிறப்புத்தன்மை, இனிமை, புதுமை இருக்கும். அதாவது தனி நடை (பாணி /  Style) இருக்கும். இப்படி ஒவ்வொரு இசைப் படைப்பிலும், நம் இசைஞானி புதுப்புது இசைஅவதாரம் எடுக்கிறார். மேலும், பல தலைமுறைகளும் ரசிக்கும் வண்ணம் அவருடைய படைப்புகள் என்றென்றும் நிலைத்து நிற்கின்றன. எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், புதிய தலைமுறைக்கும் இசை என்று ஒரு வார்த்தையைச் சொன்னால், அதன் பொருள் இளையராஜா என்று புரிந்துவிடும்.

Infinity

நிறமாலையில் உள்ள நிறப்பட்டையில் கூட (Band of Light Spectrum) பல மில்லியன் நிறங்களை நாம் பிரித்துப் பார்த்தாலும், அவை யாவும் ஒரு குறிப்பிட்ட  அலைநீள /அதிர்வெண் எல்லைக்கு (Wavelength / Frequency Band) உட்பட்டுத்தான் இருக்கும். ஆனால், நம் இசைஞானியின் இசைமாலையில் உள்ள இசைப் படைப்புகளுக்கு / இசை வடிவங்களுக்கு எல்லையே (Boundless / Infinite) கிடையாது.

இப்படி ஒரு தனி மனிதரால், ஒவ்வொரு தலைமுறையும் விரும்பும் வண்ணம், வெவ்வேறு விதமான இசையை, வற்றாத ஊற்று போல், புதுமையுடன் அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டே இருக்க முடியும் என்றால் அதற்கு மிகச் சிறந்த சான்று தான் நம் இசைஞானி.

Music

இசைஞானி இளையராஜாவின் குரலில் பாடிய சில பாடல்களைப் பற்றி இப்போது பார்ப்போம். பொதுவாக, இசைஞானியின் பாடல்களை பற்றிப் படிப்பவர்கள்,  அந்தப் பாடல்களை முழுமையாகக் கேட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவருடைய படைப்புகளின் சிறப்புத்தன்மையை நன்கு உணர முடியும்.

ஓரம் போ…  ஓரம் போ … ருக்குமணி வண்டி வருது… (படம்: பொண்ணு ஊருக்குப் புதுசு, ஆண்டு: 1979, பாடல்: கங்கை அமரன்)

இதோ ஒரு கும்மாளம் போட வைக்கும் குத்துப் பாடல்.  இந்த ஆர்ப்பரிக்கும் இசையை கேட்கும் போதே, நம்மையும் குத்துப் போட வைக்கும் இந்தப் பாடல், ஒரு சிறந்த குத்துப் பாடல்.  70-80-களிலேயே இப்படி ஒரு குத்துப் போட வைக்கும் பாடல் வந்தது என்று இன்றைய தலைமுறையினர் பலருக்குத் தெரியாது. இசைஞானியின் வெண்கலக் குரலையும், இப்பாடலின் அதிர வைக்கும் பிண்ணனித் தாள இசையையும் கேட்டால், நம்மையும் அறியாமல் ஆட வைத்து விடும்.  இப்படிப்பட்ட ஆர்ப்பரிக்கும் தாளப் பிண்ணனியின் நடுவே, அழகிய புல்லாங்குழல் இசையை இழைத்துக் கலந்து கொடுத்து இருப்பார். இந்தப் பாடல் தொடங்கியது முதல் முடியும் வரை, விறுவிறுப்பு குறையாமல் இருக்கும். இப்பாடலின் வரிகள் அதற்கேற்ப அருமையாக அமைந்து இருக்கும். இப்பாடலின் சில வரிகள்…

ஓரம் போ…  ஓரம் போ … ருக்குமணி வண்டி வருது…
ஓரம் போ…  ஓரம் போ … ருக்குமணி வண்டி வருது…

பாளையம் பண்ணைப்புரம் சின்ன தாயி பெத்த மகன்
பிச்சை முத்து ஏறியே வராண்டோய்

ரோட்ல எல்லாம்… மேடு ரொம்ப இருக்கு…
ஏத்தி விடுங்க… நல்லா தூக்கி விடுங்க…
ஏறுனதுமே எனக்கு பின்னே… நீங்க வரவேணும்..
பலமாக தள்ளாதீங்க… தள்ளாதீங்க தள்ளாதீங்க…
குறுக்கால போகாதீங்க… போகாதீங்க போகாதீங்க..

இனிக்கும் அச்சு வெல்லம்.. எள்ளு புண்ணாக்கும்
எடுத்து தர்ரேன்… பத்தாட்டி நான் இன்னும் தாரேன் டோய்…

ஏய்… இந்தப் பூங்காத்துத் தாலாட்ட… (படம்: உதிரிப்பூக்கள், ஆண்டு: 1979, பாடல்: கங்கை அமரன்)

இசைஞானியின் குரலில் 70-களின் முடிவில் வெளிவந்த ஒரு அழகிய, இனிமையான, மென்மையான பாடல். அமைதியான சூழலில் கேட்கும் போது, நம்மை எங்கோ கொண்டு சொல்லும் வல்லமை படைத்தது இந்தப் பாடல். சென்ற பாடலுக்கும், இந்தப் பாடலுக்கும் இருக்கும் வேறுபாட்டைப் பாருங்கள். அதிரவைக்கும் பாடலானலும், அமைதியான பாடலானலும், அதன் உச்ச நிலைக்கு நம்மைக் கொண்டு சென்று விடுவார் நம் ராஜா. இந்தப் பாடலின் பிண்ணனி இசை நம்மை மெய் மறக்கச் செய்யும். இது 3 1/2 நிமிடப் பாடல். இசைஞானி முதல் 2 1/2 நிமிடம் பாடி இருப்பார்; அதைத் தொடர்ந்து, எஸ்.பி. ஷைலஜாவின் இனிய, மெல்லிய, நீண்ட ராகம் 1 நிமிடத்திற்கு நீடிக்கும். இனிக்கும் இந்தப் பாடலின் சில வரிகள்:

ஏய்… இந்தப் பூங்காத்து தாலாட்ட …
சின்னப் பூவோட நீராட்ட…
ரா..கம்… இழுக்கும் காத்து…
ஒரு தா..ளம்… புடிக்கும் சேத்து….
ரசிச்சுப் பாடுது… பாத்து…

காதல் ஓவியம்… பாடும் காவியம்… (படம்: அலைகள் ஓய்வதில்லை, ஆண்டு: 1981, பாடல்: வைரமுத்து)

ஒவ்வொரு படத்துக்கு இசை அமைக்கும் போதும், இசைஞானி ஒரு புது இசை அவதாரம் எடுக்கிறாரோ என்று நமக்கு நினைக்கத் தோன்றும். இந்தப் படத்தில் உள்ள பாடல்களைக் கேட்கும் போதும் அதே எண்ணம் தான் நமக்குத் தோன்றும். இப்படத்தில் அவர் பல பாடல்கள் பாடி இருக்கிறார். அச்சிறப்பான பாடல்களில், ஒரு இனிமையான பாடல் இது. வார்த்தைகளால் இப்பாடலின் இனிமையை விளக்க முடியாது. தேனின் இனிமையை எப்படி சுவைத்தால் மட்டுமே உணர முடியுமோ, அதுபோல், இப்பாடலைக் கேட்கும் போது தான் இதன் இனிமையை உணர முடியும்.

மெட்டி ஒலி காற்றோடு … என் நெஞ்சைத் தாலாட்ட … (படம்: மெட்டி, ஆண்டு: 1982, பாடல்: கங்கை அமரன்)

எஸ். ஜானகியின் அழகிய ராகம், குழலோசை, ராஜாவின் குரலோசை ஆகிய மூன்றும்; மெய் மறக்கச் செய்யும் அழகிய பிண்ணனி இசையுடன் கலந்து இருந்தால் எப்படி இருக்கும்? இந்தப் பாடலைக் கேட்டவுடன், இந்தக் கேள்விக்கு விடை கிடைத்து விடும்.

மலரே பேசு மௌன மொழி…. (படம்: கீதாஞ்சலி, ஆண்டு: 1985)

இன்னிசை மழையில் நனைய வைக்கும் இந்தப் பாடலைக் கேட்டால், மலர்கள் மௌன மொழி அல்ல, வாய் திறந்தே பேசிவிடும். இளையராஜாவும், சித்ராவும் பாடிய அழகிய பாடல் இது. இசைஞானி, அவர் குரலில் ஒரு சிறு மாயம் செய்து சற்றே மாற்றி வாலிப ராகம் பாடியிருப்பார்.

அடி ஆத்தாடி… இளமனசொன்னு ரெக்க கட்டி பறக்குது… (படம்: கடலோரக் கவிதைகள், ஆண்டு: 1986, பாடல்: வைரமுத்து)

அடி ஆத்தாடீஈஈஈஈஈ…. என்று எஸ். ஜானகி உரக்கப் பாடத் தொடங்கும் போதே, நாயகியின் உற்சாக மனநிலையை நமக்குப் புரிய வைத்து விடுவார். அதைத் தொடர்ந்து வரும் பிண்ணனி இசையும், இசைஞானியின் குரலும், நம்மை வியப்பில் ஆழ்த்தி மெய் மறக்கச் செய்யும். இந்தப் பாடலைக் கேட்கும் போது, இதற்கு முன் கேட்டிராத, புதுமையும், உற்சாகமும் நமக்குள் வருவதை நாம் உணரலாம். இது மேற்கத்திய இசையா, இல்லை தெம்மாங்கு இசையா? நம்மால் பிரித்துக் கூற இயலாது. காற்றில் கலந்த மலரின் வாசம் போல், இரண்டையும், சரியான விகிதத்தில் கலந்து, இவை இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாத வண்ணம் அழகாகக் கலந்து, நமக்கு புதுமையான இசையை அள்ளி வழங்கி இருப்பார்.

நிலா அது வானத்து மேலே… (படம்: நாயகன், ஆண்டு: 1987, பாடல்: இளையராஜா)

70-களில் வெளிவந்த பாடல்கள் மற்றும் பிண்ணனி இசைக்கும், 80-களில் வெளிவந்த பாடல்கள் மற்றும் பிண்ணனி இசைக்கும் வெவ்வேறு பரிமாணத்தை நமக்கு இசைஞானி காட்டி இருப்பார் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சிறந்த உதாரணம். பொதுவாகவே, இசைஞானியின் பாடல்கள் ஒலிக்காத தெருக்களே தமிழகத்தின் இருக்காது என்று சொல்லலாம். 80-களில் தமிழகத்தின் மூலை முடுக்குகளை எல்லாம், அதிர வைத்த இசைஞானியின் பாடல்களில் இந்தப் பாடலுக்கும் ஒரு பெரும் பங்கு உண்டு. இந்தப் பாடலை இசைஞானி பாடியுள்ளார் என்பது மட்டும் அல்ல, இதை அவரே எழுதியும் உள்ளார் என்பது இப்பாடலின் மற்றொரு சிறப்பு.

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்… உள்ளத்தை மீட்டுது…. (படம்: ஊரெல்லாம் உன் பாட்டு, ஆண்டு: 1991)

இசைஞானியின் குரலும், குழலும் கலந்து வரும் அழகான பாடல் இது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்களில் இதுவும் ஒன்று.

ஏப்ரல் – மே – யிலே பசுமையேயில்லே… (படம்: இதயம், ஆண்டு:1991, பாடல்: வாலி​)

இசைஞானி, தீபன் சக்கரவர்த்தி, எஸ்.என் சுரேந்தர் ஆகியோருடன் பாடிய ஒரு துள்ளலான இசையுடன் அமைந்த பாடல். இது 27 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பாடல்,  என்று யாராலும் கூற முடியாது. இன்று வெளிவந்த பாடல் போல் புதுமை மணம் மாறாத பாடல் இது.

வள்ளி வள்ளியென வந்தான்… வடிவேலன் தான்… (படம்: தெய்வவாக்கு, ஆண்டு: 1992, பாடல்: வாலி)

வள்ளி… வள்ளியென வரும் வடிவேலன் பாடலில், அழகிய புல்லாங்குழல் இசையைக் கேட்க வேண்டுமா? இந்தப் பாடலைக் கேளுங்கள்! இந்தப் பாடலைக் கேட்ட உடனே கேட்டவர்க்கு, இவர்தான் இசையின் ராஜா என்று பட்டம் சூட்டிவிடத் தோன்றும். இந்தப் பாடலைக் கேட்கும் போது, இவரால் மட்டும் எப்படி, இதுபோன்ற வியத்தகு இசை வடிவங்களையும், ஒலிகளையும் உருவாக்க முடிகிறது என்று கேட்கத் தோன்றுவது மட்டும் அல்லாமல், இப்பாடல் வியப்பில் நம்மை திக்கு முக்காடவும் வைத்து விடும். ஆம். ராஜா என்றென்றும் ராஜாதி ராஜா தான்.

நில்லாத வெண்ணிலா… நில்லு… நில்லு… (படம்: ஆணழகன், ஆண்டு: 1995, பாடல்: வாலி)

இசைஞானியின் அழகிய குரல், புதுமையான தாளப் பிண்ணனி இசை மற்றும் ஸ்வர்ணலதாவின் இனிய குரல் இவற்றுடன்  அமைந்த தித்திக்கும் பாடல் இது. இப்பாடல் நாம் அதிகம் கேட்டிராத பாடல். திரைப்படத்தில் இடம்பெறாத பாடல்களில் இதுவும் ஒன்று.

மாலை வெயில் அழகி… மஞ்சள் முகத்தழகி….  (படம்: கண்ணாத்தாள், ஆண்டு: 1998)

மழை வேண்டி, ஏழைகளின் துன்பம் நீக்கக் கடவுளை வேண்டிப் பாடும் கருத்து அமைந்த இந்தப் பாடல், இசைஞானி குரலிலும் இசையிலும் அமைந்த ஒரு தீஞ்சுவைப் பாடல். பெற்ற தாயை, கடவுளுக்கு உவமையாக கூறும் வரிகள் அமைந்த இந்தப் பாடலை,  இசைஞானி மனம் உருகிப் பாடி இருப்பார். இப்பாடலின் கால அளவு 2-1/2 நிமிடம் தான். இன்னும் இந்தப் பாடல் நீடிக்கக் கூடாதா என்று நம்மை ஏங்க வைத்து விடும். தேனும்-தினை மாவும், முக்கனியும்-சர்க்கரையும் கூட நம்மை தெவிட்டு நிலையை அடையைச் செய்யும். ஆனால், இப்பாடல், எத்தனை முறை கேட்டாலும், தெவிட்டாத, தித்திக்கும் தீஞ்சுவைப் பாடல். அழகிய இப்பாடலின், சில வரிகள்:

மாலை வெயில் அழகி…
மஞ்சள் முகத்தழகி….
வானவில் கையழகி….
மின்னல் சிரிப்பழகி…

…. … ….

தாய் இருக்கப் பிள்ளை ஏங்காது…
நீ இருக்க.. அன்பு தூங்காது…
அன்னை முகந்தன்னைக் காணாது…
பிள்ளைக்கு வேறொன்றும் தோணாது…

கேட்காத வாத்தியம் கேட்குது… ஊரான ஊருக்குள்ள (படம்: மேற்குத்தொடர்ச்சி மலை, ஆண்டு: 2018)

மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை, இசைஞானியின் குரலும் இசையும் மிஞ்சி விடுவதை இப்பாடலின் மூலம் நாம் உணரலாம்.

ரசிகனே என் அருகில் வா…. (படம்: மணிப்பூர் மாமியார், ஆண்டு: 1979, பாடல்: கங்கை அமரன்)

இசைஞானியின் குரலில் அதிகம் கேட்டிராத ஒரு அருமையான பாடல். மேற்கத்திய இசையுடன், தெம்மாங்குப் பாடல்…

ரசிகனே என் அருகில் வா…
ரசிகனே என் அருகில் வா…

…. …. …

ஸ்வரங்களில் ஒரு அதிசயம்.. 
சொன்னாலும், கேட்டாலும் இன்பம்… 

அலையிலும்… ஒரு ஸ்ருதி வரும்… 
அசைவிலும்… ஒரு ஜதி வரும்  …

ஆறோடும் நீரோட்டம்; 
அங்கேயும் ஓர் ராகம்; கேட்கும்… 
யாவும்… நாதம்… கீதம்  

…. …

தெரிந்ததை… நான் கொடுக்கிறேன்…
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து….
இதயங்கள் சில எதிர்க்கலாம்…
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்…

நான் காணும் உள்ளங்கள் … நல் வாழ்த்துச் சொல்லுங்கள்..
நாளும்… நாளும்… இன்பம்… இன்பம்….

இப்பகுதியில் உள்ள பாடல்களில் சிலவற்றை இசைஞானியின் செயலி அல்லது யூட்யூப் சானலில் கேட்கலாம். அவற்றிற்கான முகவரிகள்:

இப்பகுதியில் நாம் பார்த்த பாடல்கள், இசைஞானியின் படைப்புகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பரிமாணத்தில் மின்னுகின்றன என்பதற்கு ஒரு சிறிய சான்று. இசைஞானியின் இசையில் அமைந்த, பிறர் பாடிய பாடல்களைப் பற்றியும் அடுத்த பகுதியில் பார்ப்போம்… (தொடரும்…)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.