இசை அவதாரம்
ஆ… எம்பாட்ட கேட்டுப் பூட்டா….. ஆ.. ஆ… ஆ…
ஊரு சனமெல்லாம் மெய் மறக்கும்….
அது உசுரோட போய் கலக்கும்ம்…..
அவதாரம் படத்தில் வரும் “அரிதாரத்தப் பூசிக்கொள்ள ஆச…” என்ற இந்த பாடல் வரிகளில் இருக்கும் உண்மையை யாராலும் மறுத்துக் கூறமுடியாது. ஆம்… இசைஞானி இளையராஜாவின் பாடலைக் கேட்ட அனைவரும் இதை நிச்சயம் உணர்ந்து இருப்பார்கள். இந்த அழகிய பாடலை நாம் எத்தனை முறை கேட்ட பின்பும், அடுத்த முறை திரும்பக் கேட்கும்போது, இதைப் புதிதாகக் கேட்பது போன்ற உணர்வும், உற்சாகமும், நமக்கு இருக்கும். இந்தப் பாடல் முழுவதும், இழைந்து வரும் மெல்லிய இசை, நம்மை எங்கோ கொண்டு செல்லும். மேலே சொன்ன வரிகளில், “அது உசுரோட போய் கலக்கும்….” என்ற வரியுடன், மெல்லிய குழலிசையையும், இழைத்து, நம் இசைஞானி, பாடுவதைக் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே, அந்த இசை, நம் உயிருடன் கலந்துக் கொண்டு இருப்பதை நம்மால் உணர முடியும்.
இளையராஜாவும், எஸ். ஜானகியும், மிக அழகாகப் பாடியுள்ள, இந்தப் பாடலில், மேலும் சில வரிகளைப் பார்ப்போம்.
பாட்டுன்னு நெனப்பதெல்லாம்…
இங்கு பாட்டாக இருப்பதில்ல….
அது என் பாட்டு இல்ல….
அது லேசான விஷயமில்ல…
அதை யாரு இல்லன்னா….
அதுக்காகத்தான், இசை அவதாரமா,
நான் பொறந்தேன்னு… பூலோகம்… பாராட்டுமே….
ஆம். இது போன்ற, ஆயிரக்கணக்கான அரிய இசைப் படைப்புகளை நமக்கு அள்ளி வழங்கியுள்ள, நம் இசை ஞானி, நமக்குக் கிடைத்த ஓர் இசை அவதாரம் தான். எவ்வளவு ஆழ்ந்த சோகத்தில் இருந்தாலும், எங்கோ தொலைவில் இருந்து காற்றில் மிதந்து வரும் இவரது இசை, ஒரு சில நிமிடங்கள் நாம் இருக்கும் நிலையையும், நம்மையும் மெய் மறக்கச் செய்து விடும்.
இளையராஜா 75 (இசை 75: Music 75)
குழந்தைப் பருவம் முதல் இன்று வரை, இவரது இசையைக் கேட்டு வளர்ந்த நாம், இன்று 75-வது பிறந்தநாள் காணும் இசைஞானிக்கு நன்றி கூறும் விதமாக, இந்தக் கட்டுரையை வெளியிடக் கடமைப் பட்டிருக்கிறோம்.
ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்களை, அகராதிகளில், நாம் பார்த்து இருப்போம். ஆனால், தமிழ் அகராதியில், “இசை” என்ற சொல்லுக்குப் பொருள் தேடினால், நமக்கு “இளையராஜா” என்ற ஒரே ஒரு பொருள் தான் கிடைக்கும்.
1976-ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளியில் தொடங்கி, இன்று வரை நாற்பது ஆண்டுகளுக்கும் மேல், உலகமெங்கும் இருக்கும் தமிழர்களின் மனதில், நீங்கா இசை அரசனாக, இடம் பிடித்திருக்கிறார் நம் இசைஞானி.
அன்னக்கிளி!!! தமிழ்த் திரையுலக இசை வரலாற்றில், ஒரு திருப்பு முனை. பிண்ணனி இசையிலும், இன்னிசைப் பாடல்களிளும் ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கிய படம்.
ஓர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள், ஆறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள். எத்தனை எத்தனை அரிய படைப்புகள்? பிண்ணனி இசையாகட்டும்; அல்லது பாடல்களாகட்டும்; இவரது ஒவ்வொரு படைப்புக்கும், ஒரு தனித்துவம் இருக்கும். எந்தப் பாடலுக்கு, அல்லது கதையில், எந்த இடத்தில், எந்த இசைக்கருவியை, எந்த அளவு பயன்படுத்த வேண்டும், என்ற அறிதான நுணுக்கத்தை அறிந்த ஞானி இவர்.
பிறந்து சில நாட்களே ஆன குழந்தை முதல், வயது முதிர்ந்த முதியவர் வரை அனைவரையும், இவரது இசை மெய் மறக்கச் செய்யும்.
தென்றலில் மிதந்து வரும் தெம்மாங்குப் பாடல்கள், மனதை வருடும் மெல்லிசைப் பாடல்கள், கும்மாளம் போட வைக்கும் குத்துப் பாடல்கள், மேற்கத்திய இசையும், தமிழ் இசையும் சரியான விகிதத்தில் கலந்த தேனிசைப் பாடல்கள், நம் சோகத்தையும் மறக்க வைக்கும், மனதுக்கு ஆறுதல் தரும் இதமான சோகப்பாடல்கள்; இப்படி எத்தனை முறை, எத்தனை ஆண்டுகள் கேட்டாலும், மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும், பல்வேறு விதமான பாடல்களை நமக்கு அள்ளித் தந்து இருக்கிறார் இந்த இசைஞானி.
பாடல்கள் மட்டுமா? திரைக் கதையோடு அந்தக் கதைக்கு உயிர் கொடுக்கும் விதமாக, கதையோடு இழைந்தோடும் இவரது பிண்ணனி இசையை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
இவரது பிண்ணனி இசை, திரைப் படத்தில் பங்கு பெறும், நடிகர்களை மட்டும் அல்ல; அஃறிணைப் பொருட்களான, கல், மண், மழை, ஆறு, கடல், மேகம், வானம், புல், பூண்டு, செடி, கொடி, மரம், குருவி, கிளி, மைனா, அணில், ஆடு, மாடு வரை, அனைத்தையும் நடிக்க வைத்து இருக்கும். இவரது இசையைப் பிரித்து, அணைத்து விட்டு, படத்தை மட்டும் பார்த்தால், அந்தப் பிண்ணனி இசையின் வல்லமை நமக்குப் புரியும்.
எந்தப் பாடலைப் பாடுவதற்கு, எந்த பிண்ணனிப் பாடகர் பாடினால் பொருத்தாமாக இருக்கும் என்று, மிகச் சரியாக கணித்து வைத்து இருப்பார். ஒரு பாடலைக் கேட்கும்போது, அந்தப் பாடலை, அந்த குறிப்பிட்ட பாடகரால் மட்டும் தான் பாட முடியும், என்று நாம் எண்ணும் அளவுக்கு, அந்தப் பாடகரைத் தேர்ந்தெடுத்து, அவரைப் பாட வைத்து இருப்பார்.
சின்னத்தாயி தந்த ராசா
இவர் பாடல்களில் தலைச் சிறந்த பாடல்கள் எவை என்று, நம்மால் பிரித்துத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். இவருடைய அனைத்துப் பாடல்களுமே, தனித்துவமிக்க தலைச் சிறந்த பாடல்கள் தான். அதில் ஒரு சில பாடல்களைப் பற்றி, குருவிரொட்டியின், இந்த இசைப் பயணத்தில் பார்ப்போம். நம் வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருப்பது, நம் இசைஞானியின் இசை. அதை அள்ளி வழங்கிய நம் ராஜாவுக்கு நன்றி சொல்லும் விதமாக, நம் தொடரின் முதல் பகுதியில், “ராசாவே” என்று தொடங்கும் சில பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.
“ராசாவே” என்ற மூன்று எழுத்துகளுடய ஒரே சொல்லை கொண்டு, நம் இளையராஜா வித விதமான பாடல்களை வடிவமைத்து இருக்கிறார்.
- படம் – தளபதி: சின்னத் தாயவள்,… தந்த,.. ரா(ஆஆ)… சா(ஆஆஆ)… வே(ஏஏஏஏ)…
- படம் – தனிக்காட்டு ராஜா: ராசா(ஆ)வே(ஏஏ)…. உன்ன நான்… எண்ணித்தான்… பல ராத்திரி மூடல… கண்ணைத்தான்…
- படம் – முதல் மரியாதை: ரா…… சா(ஆஆஆ)….. வே(ஏஏஏஏஏ), உன்ன எண்ணி… இந்த ரோசாப்பூ தவிக்குதுங்க.
- படம் – அரண்மனைக் கிளி: ரா(ஆஆஆ)… சா(ஆஆ)… வே… உன்னை விட மாட்டேன்…
- படம் – வைதேகி காத்திருந்தாள்: ராசா(ஆ)வெ உன்னெ காணாத நெஞ்சு…
- படம் – வால்டர் வெற்றிவேல்: சின்ன ராசா(ஆ)…வே(ஏஏ) சித்தெறும்பு என்னெக் கடிக்குது…
ஒரே சொல்… மூன்றே எழுத்துகள்… ஆனால், அந்த மூன்று எழுத்துகளின் மாத்திரை அளவை அழகாக மாற்றி, வெவ்வேறு விதமான பாடல்களை உருவாக்கியுள்ளார்.
எஸ். ஜானகி, இசைஞானியின் மெட்டின் நெளிவு சுளிவுகளையும், ஏற்ற இறக்கங்களை நன்றாக அறிந்தவர். மேலே உள்ள பட்டியலில், முதலில் உள்ள பாடலை, அவர், இசைஞானியின் அழகிய இசையுடன் கலந்து, மனம் உருகிப் பாடி இருப்பார். சின்னத்தாயி தந்த நம் ராஜாவை, வேறு யாரும் இவ்வளவு அழகாக “சின்னத் தாயவள்,… தந்த,.. ரா(ஆஆ)… சா(ஆஆஆ)… வே(ஏஏஏஏ)…” என்று அழைத்து இருப்பார்களா என்று தெரியவில்லை. ரமண மாலையில் உருகும் அடியவன் போல; தாயின் அன்புக்காக மனம் உருகும் ஒரு மகனுக்காகப் பாடுவதாக சூழல் அமைந்த ஒரு பாடலுக்கு, இதைவிட அழகாக ஒரு மெட்டை அமைக்க முடியமா என்றால், அது விடை காண முடியாக் கேள்வி தான்.
இரண்டாவது பாடலில் (தனிக்காட்டு ராஜா), “ராசாவே” என்ற ஒரே சொல்லை மூன்று விதமாகப் பயன்படுத்தி இருக்கிறார். இந்தப் பாடல் முதல் வரியில், “ராசா(ஆ)வே(ஏஏ)” என்று தொடங்கும்… பின்னர் இதே சொல், மூன்று விதமாக, ராசாவே(ஏஏஏஏஏ)……. ராசாவே(ஏஏஏஏஏ) ……. ரா…சா(ஆஆஆஆ)….வே(ஏஏ).. என்று மாறி வரும்…. அது மட்டுமல்ல. இந்தப் பாடலுடன், இழைந்து வரும் இசை, தொடக்கத்திலிருந்து முடியும் வரை, வெவ்வேறு இடங்களில், இடத்திற்கும் வார்த்தைக்கும் தகுந்தது போல், பல வடிவங்களில் அழகாக மாறி வரும். இந்தப் பாடலில் அடிக்கோடிட்டு காண்பிக்கப்பட வேண்டியவை; பாடலின் பல வித மெட்டுக்களும், அதற்கேற்ப மாறும் இசை அமைப்பும் தான். குறிப்பாக, கிட்டாரும், புல்லாங்குழலும், சிறப்பாக தத்தம் பங்கை செம்மையாக ஆற்றும்.
பொதுவாகவே, நம் இசை ஞானியின், விரல்களுக்கு அனைத்து இசைக் கருவிகளும் அடிமை. அவர் சொல்வதை அப்படியே அவை கேட்கும். அதிலும் குறிப்பாக கிட்டாரும், புல்லாங்குழலும், இவருக்குக் கட்டுப்பட்டு, பல மந்திரங்கள் செய்து நம்மை மெய் மறக்கச் செய்துவிடும். இவருடைய கிட்டார் இசைக்கு, ஸ்பானிஷ் மற்றும் மெக்சிகன் கிட்டார் இசையால் கூட ஈடு கொடுக்க முடியாது. புல்லாங்குழலில் இருந்து, இத்தனை விதமான எண்ணிக்கையற்ற நெளிவு சுளிவுகளும், ஏற்ற இறக்கங்களும் கூடிய அழகிய இசையை நம் இசைஞானியால் மட்டும் தான் உருவாக்க முடியும்.
அடுத்து, மேற்கண்ட பட்டியலில் மீதம் உள்ள 4 பாடல்களையும் கேட்டுப் பாருங்கள். “ராசாவே” என்ற ஒரே சொல், ஒவ்வொரு பாடலிலும், வெவ்வேறு விதமாக கையாளப்பட்டிருக்கும். “ராசாவே” தொடக்கத்தில் வரும் பாடல்கள் மட்டும் அல்ல. அந்த சொல் இடையிடையே வரும் பாடல்களும் நிறைய இருக்கின்றன. அவற்றிலும், இந்த விந்தையை நாம் காணலாம்.
இளையராஜா – நமக்குக் கிடைத்த வரம்
இப்படிப் பல விதமாக, தன் ஆர்ப்பரிக்கும் இசையால், நம்மைக் கட்டிப்போட்ட நம் இசைஞானியை நாம் போற்றிப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அன்று இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், நம் இளையராஜவைப் பார்த்தது இல்லை! கோஹினூர் வைரத்தை எடுத்துச் சென்ற ஆங்கிலேயர்கள், நம் ராஜாவைப் பார்த்து இருந்தால், அந்த வைரத்தை இங்கேயே போட்டுவிட்டு, நம் ராஜாவைக் கடத்திக் கொண்டு போய், அவர்கள் நாட்டுக்கு மட்டுமே இசை அமைக்க வேண்டும் என்று கட்டளை இட்டு இருப்பார்கள். நல்ல வேளை!! அப்படி ஏதும் நடக்காமல், வெறும் வைரத்தோடு போய் விட்டது. அதனால் நமக்கு எந்த இழப்பும் இல்லை.
புதுராகம் படைப்பதாலே, நானும் இறைவனே…
புதுராகம் படைப்பதாலே, நானும் இறைவனே…
விரலிலும், குரலிலும், ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்…
எத்தனை உன்னதமான வரிகள்?
இசைஞானியின் இசைச் செயலி (Maestro’s Music App) நமக்கு கிடைத்த ஒரு புதையல். இது அவருடைய அனைத்து இசை படைப்புகளையும் நமக்கு கேட்கக் கேட்க அள்ளித் தரும் ஒரு அலாவுதீன் விளக்கு!!
இவரது இசைப் பயணத்தைப் பின் தொடர வேண்டுமா? இளையராஜாவின் ஃபேஸ்புக் முகவரியில் இவரைப் பற்றிய அண்மைப் பதிப்புகளைப் பாருங்கள்.
நம் வாழ்க்கையில், நம் உணர்வோடும், உயிரோடும் பிண்ணிப் பிணைந்த நம் இசைஞானியின் பாடல்களைப் பற்றியும், பிண்ணனி இசையைப் பற்றியும், இனி வரும் பகுதிகளில் பார்ப்போம். தொடரும்… (குழலும் குரலும்: இசை = இளையராஜா : பகுதி 2)