குருவிரொட்டி இணைய இதழ்

டாய்மானேயின் யுகுலேலி / உகுலேலே (Ukulele)

டாய்மானேயின் யுகுலேலி / உகுலேலே (Ukulele)

யுகுலேலி / உகுலேலே (Ukulele) என்பது ஹவாய் தீவைச் சார்ந்த ஒரு இசைக்கருவி (கம்பிக்கருவி). கிடாரைப் போல் உள்ள இந்த யுகுலேலி அதைவிட மெலியதாகவும், அளவில் சிறியதாகவும், 4 கம்பிகளையும் கொண்டது. ஹவாயில் உள்ள ஹனலூலூ நகரில் பிறந்து வளர்ந்த டாய்மானே கார்ட்னெர் (Taimane Gardner) யுகுலேலி கருவியை இசைப்பதில் பெரும் புலமை பெற்றவர். இவர் இந்தக் கருவியை தனது ஐந்தாவது வயதில் இசைக்கக் கற்றுத் தேர்ந்து, தன் பதின்மூன்றாம் வயதிலேயே டான் ஹோ எனும் இசைக்கலைஞரால் ஹவாய் இசையுலகுக்கு அறிமுகமானர்.

தற்போது தனது முப்பதாவது வயதில் அமெரிக்காவின் பல பகுதிகளில் யுகுலேலி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். உலகின் புகழ்பெற்ற பாடல்கள் மற்றும் திரைப்படங்களின் மைய இசையை (Theme Music) தனக்கே உரிய நடையில் யுகுலேலி கொண்டு இசைக்கிறார். டாய்மானே எனும் பெயருக்கு சமோவன் மொழியில் (Samoan Language) வைரம் என்று பொருள். அந்தப் பெயருக்கேற்றாற்போல் யுகுலேலி இசைப்பதில் பல கோணங்களில் ஒளிர்கிறார் டாய்மானே.

கீழ்க்கண்ட காணொளிக் காட்சியைச் சொடுக்கிப் பாருங்கள். டிக்கோ டிக்கோ (Tico Tico) பாடல், மிஷன் இம்பாசிபிள் (Mission Impossible), மற்றும் ஜேம்ஸ் பாண்ட் திரைபடங்களின் மைய இசை உலகின் புகழ் பெற்ற இசை வடிவங்களை யுகுலேலி கருவியில் இசைக்கிறார்.

சரி! யுகுலேலி கருவியின் ஒலியை மட்டும் தனித்துக் கேட்டால் எப்படி இருக்கும்? டாய்மானேயின் அடுத்த காணொளியைச் சொடுக்கிப் பாருங்கள்!