மார்செல்லோ பெரெங்கியின் அதிநுட்ப முப்பரிமாண ஓவியங்கள் – Hyperrealistic Three Dimentional Drawings of Marcello Barenghi
இத்தாலி நாட்டின் மிலான் நகரைச் சேர்ந்த மார்செல்லோ பெரெங்கி (Marcello Barenghi) அதிநுட்ப முப்பரிமாண ஓவியங்களை (Hyperrealistic Three Dimentional Drawings) வரைவதில் சிறந்த வல்லுநர். மேலும் லியனார்டோ டாவின்சி போன்ற உலகப்புகழ் பெற்ற ஓவியர்களின் படைப்புகளையும் மிகத்துல்லியமாக அதேபோல் வரைவதில் வல்லவர். 1969-ஆம் ஆண்டு பிறந்த இவர், குழந்தைப் பருவம் முதலே ஓவியக்கலையில் கைதேர்ந்தவர். இவர் தன் பதினோறாம் வயதில் ஒரு தொலைக்காட்சியின் ஓவியப் போட்டியில் பங்குபெற்று, இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கேடானோ சீரியாவின் (Gaetano Scirea) கேலிச்சித்திரத்தை வரைந்து, கணினியைப் பரிசாக வென்றார். இந்தப் பரிசை இவருக்கு அறிவித்தவர் இத்தாலியின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொபர்டோ பெட்டேகா (Roberto Bettega)!
மார்செல்லோவின் துல்லியமான படைப்புகள்
பின்னர் கட்டடக் கலையில் பட்டம் பெற்ற இவர், இன்றும் தனது ஓவியக்கலையில் முழு ஈடுபாட்டுடன் பல சிறந்த ஓவியங்களைப் படைக்கிறார். இவர் அதிநுட்ப ஓவியக் (Hyperrealistic Drawings) கலையில் சிறந்து விளங்கும் கலைஞர். இவர் தன் கண் முன்னே பார்க்கும் பொருட்களின் முப்பரிமாண ஓவியங்களை மிகத்துல்லியமாக வரைகிறார். ஓவியங்களில் காணப்படும் பொருட்களின் எதிரொளிப்பு, நிழல், மற்றும் நிழலுருக்கள், பொருட்களை நேரில் பார்க்கும்போது ஏற்படும் அதே உணர்வை நமக்கு ஏற்படுத்தும். இவரது முப்பரிமாணப் படைப்புகளைப் பார்க்கும்போது, அவை ஓவியங்களா அல்லது நிழற்படங்களா அல்லது மெய்யான உருவங்களா என நம்மை வியக்கவைக்கும்.
உதாரணமாக, கீழ்க்கண்ட காணொளிக் காட்சியைச் சொடுக்கிப் பாருங்கள்! முப்பரிமாண வடிவில் இவர் வரையும் அரை வேக்காட்டு முட்டை (Half Boiled Egg / Fried Egg), இது மெய்யான முட்டை தானோ என நம்மை எண்ண வைக்கும்!
அடுத்தாக மார்செல்லோ வரையும் பூனைப் படக்காட்சியைச் சொடுக்கிப் பாருங்கள். படத்தை வரைந்து முடித்தவுடன் அவரது செல்லப் பூனை அருகில் வந்து எட்டிப் பார்க்கும் போது, படத்திலுள்ள பூனைதான் தாவி வெளியே வந்துவிட்டதோ என நம்மை எண்ண வைக்கிறது!
நேரில் கண்முன்னே பார்க்கும் பொருட்களை அல்லது நிழற்படங்களில் பார்க்கும் படங்களை வரைந்து, அவற்றின் எதிரொளிப்பு, நிழல் மற்றும் நிழலுரு போன்ற கூடுதல் விவரங்களை படத்தில் சேர்க்கும் போது, அந்த படங்கள் உயிர்பெற்று விடுகின்றன. ஸ்ப்ரைட் குளிர்பானக் குப்பியை வரையும் காணொளிக் காட்சியைச் சொடுக்கிப் பாருங்கள்:
இதோ ஒரு கசங்கிய ஐரோப்பிய பணத்தாளின் ஓவியம். இவருக்குப் பொதுவாக முப்பரிமாண அதிதுல்லிய / அதிநுட்ப ஓவியங்களை வரைய சில மணி நேரங்கள் ஆகிறதாம்.
மார்செல்லோவின் இன்னும் சில படைப்புகளைக் கீழ்க்கண்ட காணொளியில் பார்க்கலாம்.
இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியர்களின் படங்களை அதேபோல் துல்லியமாக வரைகிறார். லியனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற ஓவியமான மோனா லிசா படத்தை அதே நுட்பத்துடன், அதே அளவில் அதேபோன்று வரைந்து முடிக்க இவருக்கு 3 வாரங்கள் தேவைப்பட்டதாம்! மார்செல்லோ யூரோமேக்ஸ் தொலைக்காட்சிக்குக் கொடுத்த நேர்காணலைக் கீழ்க்கண்ட காணொளியில் பார்க்கலாம்.
மார்செல்லோ பெரெங்கியின் அதிநுட்ப ஓவியக்கலையைக் கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்:
மார்செல்லோ பெரெங்கியின் இணையதளம்