பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வின்போது கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்
பொறியியல் பாடப்பிரிவுகளைப் பற்றி சென்ற பகுதியில் பார்த்தோம். தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகள் (Tamilnadu Engineering Admissions) கலந்தாய்வின் போது நீங்கள் சேரப்போகும் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதற்கான வழி முறைகளைப் (Choosing Engineering Colleges) பற்றிப் பார்ப்போம்.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகள் கீழ்க்கண்ட கல்லூரிகளுக்காக நடைபெறும்:
- அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள்
- அண்ணாப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் (Constituent Colleges)
- அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு, அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள
- அரசுப் பொறியியல் கல்லூரிகள்
- அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்
- தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகள்
நீங்கள் சேரப்போகும் கல்லூரி, +2 வகுப்பில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும். அதே மதிப்பெண்ணுக்குப் பல கல்லூரிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கும் நிலையில், மிகவும் கவனத்துடன் கல்லூரியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் படிக்கும் கல்லூரியின் தரம், உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வழி வகுக்கும்.
விருப்பமான பொறியியல் கல்லூரிகளின் வரிசை (Order of Preferences of Colleges)
பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு முன்பாகவே, உங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ற சில கல்லூரிகளைத் தெரிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் தெரிவு செய்த கல்லூரிகளை, உங்கள் விருப்பப் படி ஒன்று, இரண்டு, மூன்று, (1, 2, 3, ….) என்று வரிசைப் படுத்தி (Your Order of Preference) வைத்துக் கொள்ளுங்கள். கலந்தாய்வின் போது, போட்டி காரணமாக, ஒரு வேளை, உங்கள் விருப்ப வரிசையில் முதலாவதாக (Your First Preference) உள்ள கல்லூரி, உங்களுக்கு கிடைக்கவில்லையெனில், இரண்டாவதாக உங்கள் விருப்பப் பட்டியலில் (Second Preference) உள்ள கல்லூரி கிடைக்கிறதா என்று பாருங்கள். இப்படி முன் கூட்டியே தயராக இருந்தால், கலந்தாய்வின் போது நீங்கள் கல்லூரி தெரிவு செய்வது குறித்து, அவசர முடிவு எடுப்பதைத் தவிர்க்கலாம்.
உங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்ப, நீங்கள் வரிசைப் படுத்த நினைக்கும் விருப்பக் கல்லூரிகளை எப்படி தெரிவு செய்வது என்று பார்ப்போம்:
- கடந்த 3 (மூன்று) ஆண்டுகளில், நீங்கள் விரும்பும் பொறியியல் பிரிவில், எவ்வளவு மதிப்பெண்களுக்கு எந்த கல்லூரியில், இடம் கிடைத்துள்ளது என்ற விவரத்தை, பொறியியல் சேர்க்கைக்கான இணைய தளத்தில் பாருங்கள். உதாரணமாக, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகளுக்கான இணையதளத்தில் பார்த்தால், குறைந்தபட்ச மதிப்பெண்கள் (Minimum Cut-Off details from previous years’ Engineering Admissions) அடிப்படையில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் பொறியியல் பிரிவுகள் பற்றிய விவரங்களை அறியலாம்.
- அரசின் பொறியியல் கலந்தாய்வுக்கான இணைய தளத்தில், மதிப்பெண்கள் / மாவட்டம் / வகுப்பு / பொறியியல் பிரிவு ஆகியவற்றை உள்ளீடு செய்து, எந்தக் கல்லூரியில், கடந்த 3 ஆண்டுகளில் மாணவர்கள் சேர்ந்தார்கள் என்று அறியலாம். இப்படி சென்ற ஆண்டு நிலவரங்களை அறிவதால், தோராயமாக இந்த ஆண்டு எந்தக் கல்லூரியில் சேர உங்களுக்கு வாய்ப்பு உள்ளது என்பதை நீங்கள் கணித்துக் கொள்ளலாம்.
இத்தகைய, பழைய நிலவரங்கள், உங்களுக்கு ஒரு வழிக்காட்டியாக செயல்படுமே தவிர, இந்த ஆண்டும் சென்ற ஆண்டு சேர்க்கை நிலவரமே இருக்கும் என்று அர்த்தம் இல்லை. இவ்வாறாக, தோராயமாக, நீங்கள் சேர முடியும் என்று நினைக்கும் கல்லூரிகளை, உங்கள் விருப்பப் படி பட்டியல் இட்டுக் கொண்டு கலந்தாய்வுக்குத் தயாராகுங்கள்.
பொறியியல் கல்லூரிகளின் தரம் (Quality of Engineering Colleges)
பழைய புள்ளி விவரங்கள் மூலமாகவோ, அல்லது பிறர் மூலமாகவோ, நீங்கள் கேள்விப் பட்டு குறிப்பிட்ட கல்லூரிகளில், நீங்கள் சேர விரும்பினால், அந்தக் கல்லூரிகளின் தரம் முதலிய பல முக்கிய விவரங்களை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.
- பிறர் ஒரு கல்லூரியைப் பற்றி பெருமையாக கூறுவதால் மட்டும், அந்த கல்லூரி சிறந்த தரமான கல்லூரி என்று ஆகிவிடாது. ஒரு கல்லூரியின் தரத்தை அறிய, கீழே பட்டியல் இட்டுள்ளது போல் பல விவரங்களை சேகரியுங்கள்:
- கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகம் (Anna University – Affiliated Colleges) மற்றும் அனைத்து இந்திய தொழில் கல்விக் குழுமம் (All India Council for Technical Education) ஆகியவற்றின் ஒப்புதல் (Approval) பெற்ற கல்லூரியா என்று தெரிந்து கொள்ளுங்கள்
- கல்லூரி எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
- கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள் (Infrastructure) எப்படி?
- கல்லூரியில் போதுமான அளவுக்கு தரமான / அனுபவம் மிக்க உதவி / இணை / பேராசிரியர்கள் இருக்கிறார்களா?
- கல்லூரியில் ஆய்வுக் கூடங்கள் (Laboratories) தகுந்த வசதியுடன் உள்ளனவா?
- கல்லூரியில் தரமான நூலகம் (Library) உள்ளதா?
- படித்து முடிக்கும் போது கல்வி இறுதியாண்டில், வளாக நேர்காணல் மூலம் தொழில் நிறுவனங்கள், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு (Placements through Campus Interviews) அளிக்க வருகின்றனவா?
- கல்லூரியில் மேற்படிப்புக்கான வசதிகள் (Facilities / Infrastructure for Higher Studies) உள்ளனவா?
- விடுதி வசதிகள் (Hostel Facilities) எப்படி?
- விடுதியில் மாணவர்களுக்குத் தரமான உணவு (Quality of Food) வழங்கப் படுகிறதா?
- கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், மற்றும் போக்குவரத்துக் கட்டணம் ஆகியவை, அரசு நிர்ணயித்த அளவு மட்டுமே உள்ளனவா?
- விளையாட்டு வசதிகள் (Infrastructure for Sports)
இது போன்ற பல தகவல்களை கீழ்க்கண்டவாறு சேகரிக்கலாம்:
- கல்லூரி வலைதளத்தில் பார்த்து;
- அந்தந்த கல்லூரிகளுக்கு உங்கள் பெற்றோருடன் சென்று;
- அங்குள்ள மாணவர் சேர்க்கைப் பிரிவில் விசாரித்து;
- அங்குள்ள பேராசியர்களிடம் கலந்துரையாடி;
- கல்லூரி வளாகத்தை சுற்றிப் பார்த்து, கட்டமைப்பு வசதிகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டு;
- அந்தந்த கல்லூரிகளில் படித்து முடித்த அல்லது படிக்கும் மாணவர்களிடம் கலந்துரையாடி;
- உங்கள் பகுதியில், அந்தக் கல்லூரிகளைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் நன்கு விசாரித்து;
இப்படி பல விதமாக ஆராய்ந்து, கல்லூரிகளின் தரம் பற்றி தெரிந்த பின்பு, அவற்றை உங்கள் விருப்பப் படி பட்டியலிட்டு, அதிலிருந்து, நீங்கள் சேரவிருக்கும் கல்லூரியை இறுதியாகத் தேர்ந்தெடுங்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளின் பட்டியலைப் பார்க்க, கீழ்க்கண்ட இணைய முகவரியைக் கிளிக் செய்யவும் / தொடவும்:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகள் (Anna University – Affiliated Colleges)
பிற பயனுள்ள இணைய முகவரிகள்
- தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகள் 2019 (TNEA 2019)
- முந்தைய ஆண்டுகளுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் (Previous Years’ Cut-Off Marks)
- பொறியியல் பிரிவுகளும் அவற்றைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளும்
- கல்லூரிகளைப் பற்றி அறிய (Know Your College)
- அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (All India Council for Technical Education – AICTE)