கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Recipe
தேவையான பொருட்கள்
- கத்திரிக்காய் = 1/4 கி
- தேங்காய் = 1 மூடி
- சீரகம் = 1 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் = 1 சிட்டிகை
- காய்ந்த மிளகாய் = 7
- பெரிய வெங்காயம் = 1 பாதி (அ) சாம்பார் வெங்காயம் = 2
- புளி = 25 கிராம்
- எண்ணெய் = 50 கிராம்
- கடுகு = சிறிது
- கறிவேப்பிலை = சிறிது
- தேவைக்கேற்ப உப்பு
செய்முறை
- கத்திரிக்காயை அரிந்து தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
- பின் தேங்காய், வெங்காயம், மிளகாய் மற்றும் சீரகத்தை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகைப் போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையையும், கத்திரிக்காயையும் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். காய் வெந்தவுடன் உப்பை போட்டு கிளறவும்.
- பின்பு அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் போட்டு கிளறவும். அதனுடன் மஞ்சள் தூளையும் போடவும்.
- புளியைக் கரைத்து அதில் ஊற்றிவிடவும். குழம்பு கொதித்தவுடன் தேவைப்படின், சிறிது உப்பைக் குழம்பில் போட்டு கிளறிவிட்டு இறக்கிவைக்கவும்.
இப்போது மணம் மிக்க கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு தயார். இதற்கு தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கத்திரிக்காய் புளிக்கறி என்று பெயர். இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். மிகவும் எளிமையான மற்றும் அருமையான குழம்பு.
குறிப்பு: கத்திரிக்காய்க்கு பதில், வாழைக்காய் அல்லது முருங்கைக்காய் பயன்படுத்தியும் வாழைக்காய் புளிக்கறி அல்லது முருங்கைக்காய் புளிக்கறி சமைக்கலாம். ஆனால், ஒரு வித்தியாசம். வதக்குவதற்கு முன், வாழைக்காய் அல்லது முருங்கைக்காயை, முதலில் சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ள வேண்டும்.