தக்காளிக்காய் சாம்பார் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Green Tomato Sambar – Recipe
தேவையான பொருட்கள்
- தக்காளிக்காய் = 1/4 கிலோகிராம்
- வெங்காயம் = 2
- பச்சைப்பருப்பு = 100 கிராம்
- தனி மிளகாய்த்தூள் = 3 மேசைக்கரண்டி
- தனியாத்தூள் (கொத்தமல்லித்தூள்) = 2 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் = சிறிதளவு
- பூண்டு = 4 பற்கள்
- கறிவேப்பிலை = சிறிதளவு
- கொத்தமல்லி தழை = சிறிதளவு
- பெருங்காயத்தூள் = சிறிதளவு
- எண்ணெய் = 50 மிலி
- கடுகு = சிறிதளவு
- தேவைக்கேற்ப உப்பு
செய்முறை
- தக்காளிக்காயை அரிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பை பற்றவைத்து ஒரு பாத்திரத்தை அதில் வைத்து, எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்தவுடன், கடுகைப் போடவும். கடுகு வெடித்தவுடன், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
- அரிந்த தக்காளிக்காய் துண்டுகளை அதில் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மற்றும் தனியாத்தூள் ஆகியவற்றைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறிவிட்டு, 2 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு அதை அடுப்பிலிருந்து இறக்கி தனியாக வைக்கவும்.
- மற்றொரு பாத்திரத்தில் பருப்பைப்போட்டு வேகவிடவும். பருப்பு பாதி வெந்தவுடன், பூண்டை உரித்து அதில் போடவும்.
- சிறிது நேரம் கழித்து, வதக்கிய தக்காளியை பருப்பில் போட்டு, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்றாக கொதிக்கவிடவும்.
- சாம்பார் கொதித்தவுடன், பெருங்காயத்தூளை அதில் போட்டு, பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கிவைத்து, கொத்தமல்லித் தழையை அதில் போட்டு மூடி வைக்கவும்.
இப்போது சூடான மற்றும் சுவையான தக்காளிக்காய் சாம்பார் தயார்.
Be the first to comment