உருளைக்கிழங்கு குருமா – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு = 1/4 கிலோ
- தக்காளி = 4
- பூண்டு = 5 பற்கள்
- சோம்பு = 1 மேசைக்கரண்டி
- கசகசா = 3 மேசைக்கரண்டி
- தேங்காய் = 1 மூடி
- குழம்பு மிளகாய்த்தூள் = 25 கிராம்
- மஞ்சள் தூள் = 1 சிட்டிகை
- இஞ்சி = சிறிய துண்டு
- ஏலக்காய் = 2
- பிரியாணி இலை = ஒன்று
- கறிமசாலாப் பட்டை = சிறிது
- புதினா இலை = சிறிதளவு
- தனியா = 2 மேசைக்கரண்டி
- வெங்காயம் = 2
- மிளகு = 5
- சமையல் எண்ணெய் = 100 மி.லி
- உப்பு = தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக அரிந்து எடுத்துக் கொள்ளவும்.
- தக்காளி, வெங்காயம் இவற்றையும் அரிந்து எடுத்துக் கொள்ளவும்; பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
- பின் அடுப்பைப் பற்ற வைத்து, பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் பட்டை, பிரியாணி இலை, சோம்பு மற்றும் புதினா ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். பின், அதனுடன் தக்காளி, வெங்காயம் பூண்டு இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.
- அதனுடன் அரிந்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- பின் மஞ்சள்தூளையும் குழம்பு மிளகாய்த்தூளையும் சேர்க்கவும். கிழங்கில் சேர்வதற்காக சிறிது உப்பையும் போட்டு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கிளற வேண்டும்.
- அடுப்பை மெதுவாக எரிய விடவும். பின் தேங்காயைத் துருவி, அதனுடன் தனியாவையும் சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி வறுக்கவும். வறுத்த தேங்காய், தனியாவுடன், இஞ்சி, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- கசகசாவைத் தனியாகச் சிறிய ஜாரில் போட்டு நன்றாக மை போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் அரைத்த மசாலாவையும், தனியாக அரைத்த கசகசாவையும் சேர்த்து அதில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கலக்கி விடவும்.
- பின் அதை நன்றாக கொதிக்கவிடவும். குழம்பிற்கு தகுந்தவாறு உப்பு போடவும்.
இது சாதத்திற்கு சுவையாக இருக்கும்.