முழு எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்:
- சிறிய அளவுள்ள கத்திரிக்காய்கள் = 300 கிராம்
- பெரிய வெங்காயம் = 2
- தக்காளி = 3
- முழு பூண்டு = 2
- புளி = ஒரு எலுமிச்சம் பழம் அளவுக்கு சமமான அளவு
- சமையல் எண்ணெய் = 150 மி.லி.
- மிளகாய்த் தூள் (தனியா சேர்த்து அரைத்தது) = 50 கிராம்
- மிளகு தூள் = 1 சிட்டிகை
- சீரகம் = 1/4 மேசைக்கரண்டி (Table Spoon)
- மஞ்சள் தூள் = 1/4 மேசைக்கரண்டி (Table Spoon)
- வெந்தயத் தூள் = 1 மேசைக்கரண்டி (Table Spoon)
- பெருங்காயத் தூள் = சிறிதளவு
- உப்பு = தேவையான அளவு
- கடுகு = சிறிதளவு
- கொத்தமல்லி தழை, கறி வேப்பிலை = தேவையான அளவு
செய்முறை:
- பூண்டை உரித்துப் பற்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம் இவற்றைப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
- முழுக் கத்திரிக்காயை நான்கு கீறல்களாக வகிர்ந்து எடுக்கவும். சிறு துண்டுகளாக வெட்டக் கூடாது.
- மிளகாய்த் தூளுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். வகிர்ந்து வைத்த கத்திரிக்காயை, பிசைந்த மிளகாய்த் தூளில் அமுக்கி சிறிது நேரம் வைக்கவும்.
- அடுப்பைப் பற்ற வைத்து, பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்தவுடன் கடுகைப் போடவும். எண்ணெயில் கடுகு வெடித்தவுடன், அதில் கறிவேப்பிலையைப் போடவும். பிறகு, பூண்டை அதில் போட்டு, நன்றாக வதக்கவும். பூண்டு பொன்னிறமாக வந்தவுடன், எண்ணெயில் வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்.
- அடுப்பை மெதுவாக எரிய விடவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் எண்ணெயில் தக்காளியையும் போட்டு நன்றாக வதக்கவும்.
- எல்லாம் நன்றாக வதங்கியவுடன், மிளகாய்த்தூளில் ஊறிய கத்திரிக்காயை அதில் போட்டு நன்றாக வதக்கவும்.
- கத்திரிக்காய் வதங்கியதும், புளியைக் கரைத்து அதில் ஊற்றவும். அதனுடன், மஞ்சள் தூள், சீரகத் தூள், வெந்தயத் தூள், மிளகுத் தூள், பெருங்காயத் தூள் எல்லாவற்றையும் சேர்த்து, நன்றாக கிளறி விடவும்.
- குழம்பு நன்றாக கொதித்தவுடன், இறக்கி வைத்து, அதில் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளைத் தூவவும.
குறிப்பு: மிளகாய்த் தூளில் உப்பு கலந்து பிசைந்ததால், குழம்பில் உப்பு சேர்க்கத் தேவையில்லை. வேண்டுமெனில், சுவைத்துப் பார்த்து, உங்கள் தேவைக்கேற்ப மேலும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
Be the first to comment