“காய்கறிகளின் அரசன்”, கத்திரிக்காய் (Brinjal / Eggplant / Aubergine), இல்லாத சாம்பார் என்றால், அது உப்பில்லாத உணவு போல இருக்கும். அப்படி நம் வாழ்வில், இன்றியமையாத காய்கறியாகிவிட்டது இந்தக் கத்திரிக்காய். இன்றைய பகுதியில், இப்போது தான் தோட்டத்தில் பறித்து எடுத்தாற் போன்ற, புத்தம் புதிய, செழுமையான, அழகிய, கத்திரிக்காயை எடுத்து, அதிலிருந்து, சுவையான, மணமுடன் கூடிய துவையல் (Brinjal Chutney) செய்வது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் = 1/4 கிலோ கிராம்
பெரிய வெங்காயம் = 2 (சிறிய அளவாக எடுத்துக் கொள்ளவும்)
காய்ந்த மிளகாய் = 5
பச்சை மிளகாய் = 2 (காய்ந்த மிளகாய் போட்டாலும், பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வதால், அது அருமையான புதிய மணத்தைக் கொடுக்கும்.)
பூண்டு = 4 பற்கள்
வெந்தயத் தூள் = ஒரு சிட்டிகை
புளி = சிறிதளவு
பெருங்காயத்தூள் = சிறிதளவு
சமையல் எண்ணெய் = காய் வதக்குவதற்குத் தேவையான அளவு
சமையல் உப்பு = தேவையான அளவு
செய்முறை:
1. கத்திரிக்காய், வெங்காயம் ஆகியவற்றை அரிந்து எடுத்துக் கொள்ளவும். புளியை ஒரு சிறு கிண்ணத்தில், தனியாக ஊற வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தை எரியும் அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும்.
3. எண்ணெய் காய்ந்தவுடன், வெங்காயம், கத்திரிக்காய், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை எண்ணெயில் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
4. வதக்கிய காயுடன், ஊற வைத்த புளி, பூண்டு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, மிக்சியில் போட்டு நன்றாக விழுதாக வரும் வரை அரைத்து எடுக்கவும்.
இப்போது, சுவை மிகுந்த, நறுமணமுள்ள, புத்தம் புதிய, கத்திரிக்காய் துவையல் தயார். இதை எந்த விதமான உணவுடனும், சேர்த்து உண்ணலாம். காலை சிற்றுண்டி, மதிய சாப்பாடு, மற்றும் இரவு உணவு, இப்படி எந்த வேளைக்கான உணவுடனும், இதைச் சேர்த்துக் கொள்ளலாம்.