இன்றைய பகுதியில், மிகவும் சுவையான, பூண்டுத் தொக்கு (Garlic Chutney) செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். இதை, இட்லி, தோசை, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், ஆகிவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பூண்டு = 150 கிராம்,
புளி = ஒரு சுளை
காய்ந்த மிளகாய் = 6
கறிவேப்பிலை = 2 சிறிய கொத்து
பெருங்காயத் தூள் = ஒரு சிட்டிகை
சமையல் எண்ணெய் = 25 மி.லி.
கடுகு = 1 சிறிய தேக்கரண்டி
உப்பு = தேவைக்கேற்ப
செய்முறை:
- முதலில் அடுப்பைப் பற்ற வைத்து, மெதுவாக எறிய விட்டு, ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணைய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன், அதில் உரித்த பூண்டை, கறிவேப்பிலையுடன் சேர்த்துப் போட்டு, பூண்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- பின்பு, காய்ந்த மிளகாய், வதக்கி வைத்த பூண்டு, புளி, உப்பு, ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன், கடுகைப் போடவும். கடுகு வெடித்தவுடன், அரைத்து வைத்த விழுதை, அதில் போட்டு, அதனுடன் பெருங்காயத் தூளையும் சேர்த்து, நன்றாக வதக்கிய பின்பு, அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
இப்போது, சுவையான, மணமுடன் கூடிய, பூண்டுத் தொக்கு தயார். இதை காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைக்கும், உணவுடன் சேர்த்து சுவைக்கலாம்.
Be the first to comment