குருவிரொட்டி இணைய இதழ்

பச்சை மிளகாய்த் துவையல் – செய்முறை

அறுசுவை உணவு என்றாலே, நம் நினைவுக்கு உடனே வருவது காரசாரமான உணவு வகைகள் தான். இனிப்பு இல்லாத உணவு வகைகளைக் கூட நாம் தவிர்த்துப் பத்தியம் இருந்து விடலாம். ஆனால், காரம் அறவே இல்லாத சாப்பாடா?  அப்படி ஒரு சாப்பாட்டை, நம்மால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. உணவில் சேர்த்துக் கொள்ளும் காரத்தின் அளவு வேண்டுமானால், அவரவர் விருப்பத்திற்கேட்ப மாறுபடலாம். ஆனால், காரம் முற்றிலும் இல்லாமல் நம்மால் சமைத்து சாப்பிட முடியாது. அப்படி, காரம் இல்லா உணவிற்கு, நம் நாக்கு இடம் கொடுக்காது! சரி… இந்தப் பகுதியில், நல்ல காரமான, அனைவரும் விரும்பக் கூடிய, பச்சை மிளகாய்த் துவையல் (Green Chilly Chutney) செய்வதைப் பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பச்சை மிளகாய் = 150 கிராம்

பூண்டு = 5 பற்கள்

புளி = 25 கிராம்

கறிவேப்பிலை = 2 தழை

சமையல் எண்ணெய் = 50 மி.லி.

கடுகு = 1/4 சிறிய தேக்கரண்டி

எலுமிச்சம் பழம் = ஒரு பாதி

பெருங்காயத் தூள் = ஒரு சிட்டிகை

சமையல் உப்பு = தேவையான அளவு

செய்முறை:   

1.  மிதமாக எரியும் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெயை ஊற்றவும்.

2.  எண்ணெய் காய்ந்தவுடன், பச்சை மிளகாயை, லேசாக கீறி, பூண்டுப் பற்களையும் சேர்த்து எண்ணெயில் போடவும். மிளகாய் வெடிக்கும். அதனால் சற்றுத் தள்ளி நிற்கவும்.

3. மிளகாயும் பூண்டும் வதங்கியவுடன், கறிவேப்பிலையையும் அதில் போட்டு வதக்கி,  இறக்கி வைத்து, ஆற விடவும்.

4.  ஆறிய பின், வதக்கிய மிளகாயுடன், புளி, பெருங்காயத் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, மிக்சியில் போட்டு, நன்றாக விழுதாக வரும் வரை அரைத்து எடுக்கவும்.

5. அரைத்து எடுத்த விழுதில், எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து 5 சொட்டு சாறு விட்டு நன்றாக கிளறி விடவும். ஏற்கனவே, புளி சேர்த்து இருப்பதால், 5 சொட்டு எலுமிச்சம் பழ சாறு மட்டும் விட்டால் போதும். எலுமிச்சம் சாறைச் சேர்ப்பாதால், துவையல் குளிர்ப்பதனப் பெட்டியில், வைக்காமலேயே 2 நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். மேலும், பச்சை மிளகாயின் ஒரு விதமான காரத்தன்மையுள்ள வாசனையைத் தவிர்த்து, நல்ல மணத்தைக் கொடுக்கும்.

இப்போது, காரமான, சுவை மிக்க, பச்சை மிளகாய்த் துவையல் தயார். இதனை இட்லி, தோசை போன்ற சிற்றுண்டி வகைகள் முதல், தயிர் சாதம், எலுமிச்சம் சாதம், சாம்பார் சாதம் முதலான, அனைத்து உணவு வகைகளுடன், சேர்த்து சாப்பிடலாம்.