ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு சமையல் குறிப்பு – மகளிர் பகுதி
தேவையான பொருட்கள்
- ஒட்டு மாங்காய் = 2 (குறிப்பு: ஒட்டு மாங்காயின் சுவை கூடுதலாக இருக்கும். அது இல்லையெனில், வேறு எந்த வகையான மாங்காயாக இருந்தாலும் பரவாயில்லை.)
- வெல்லம் = 50 கிராம்
- காய்ந்த மிளகாய் = 1
- கடுகு = சிறிதளவு
- உப்பு = ஒரு சிட்டிகை
- எண்ணெய் = 2 மேசைக்கரண்டி (தாளிக்க)
செய்முறை
- முதலில் மாங்காயைக் கழுவி தோல் சீவி சிறு துண்டுகளாக அரிந்து எடுக்கவும்.
- அடுப்பைப் பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றவும். பின் அதில் மாங்காய் துண்டுகளைப் போட்டு வேகவிடவும்.
- பின் வெல்லத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி, தேவையான அளவு தண்ணீர் விடவும்.
- வெல்லம் நன்றாகக் கரைந்தவுடன் உப்பு போட்டு இறக்கி வைக்கவும்.
- பின் வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் அதில் மிளகாயைக் கிள்ளிப்போட்டு, கடுகையும் போடவும். பின் கடுகு வெடித்தவுடன் முன்னர் வேகவைத்த மாங்காய் விழுதை போட்டுக் கிளறி எடுத்து வைக்கவும்.
இப்போது இனிமையான மாங்காய் வெல்லத் தொக்கு தயார்.
Be the first to comment