தமிழ் நாடு – தமிழ்மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே.
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே.
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே.
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே.
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே.
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே.
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே.
Be the first to comment