பெயர்ச்சொல் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? – இலக்கணம் அறிவோம்!
ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். இது ஒரு பொருளின் பெயர், இடத்தின் பெயர், காலத்தின் பெயர், உறுப்பின் பெயர், பண்பின் பெயர், தொழிலின் பெயர் ஆகியவற்றில் ஒன்றைக் குறிக்கும் சொல்லாக அமையும்.
எடுத்துக்காட்டு
மரம் (பொருள்), வீடு (இடம்), தை (காலம்), தலை (உறுப்பு / சினை), வெண்மை (பண்பு), படித்தல் (தொழில்)
பெயர்ச்சொல்லின் வகைகள்
எனவே, பெயர்சொல்லை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம்:
- பொருட்பெயர் – ஒரு பொருளைக் குறிக்கும் பெயர்
- எ.கா. – குருவி, அணில், மரம், மண், கல், நெல், சோறு
- சொற்றொடர்: அணில் மரத்திலிருந்து தாவியது.
- இடப்பெயர் – ஓர் இடத்தைக் குறிக்கும் பெயர்
- எ.கா. – வீடு, காடு, பள்ளிக்கூடம், ஊர், நகரம்
- சொற்றொடர்: மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்றனர்.
- காலப்பெயர் – காலத்தின் பெயரைக் குறிக்கும் சொல்
- எ.கா. – ஆண்டு, திங்கள், வாரம், கிழமை, காலை, மாலை, இரவு, தை
- சொற்றொடர் – தைத் திங்கள் பிறந்தது.
- சினைப்பெயர் – ஓர் உறுப்பின் பெயரைக் குறிக்கும் பெயர்
- எ.கா. – தலை, கை, கால், கிளை, வேர்
- சொற்றொடர்: மரக்கிளையில் பறவை கூடு கட்டியது.
- பண்புப்பெயர் – பண்பின் பெயரைக் குறிக்கும் பெயர்
- எ.கா. – பச்சை (நிறப்பண்பு), வளமை, ஒழுக்கம், அடக்கம்
- சொற்றொடர்: இலையின் நிறம் பச்சை.
- தொழிற்பெயர் – தொழிலைக் குறிக்கும் பெயர்
- எ.கா. – நடத்தல், படித்தல், ஆடுதல், ஓடுதல், உறங்குதல்
- சொற்றொடர்: காலையில் படித்தல் வேண்டும்.
மேலும், பெயர்ச்சொற்களை அவற்றை வழங்கும் அடிப்படையில், இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்:
- இடுகுறிப்பெயர் – காரணமின்றி வழங்கப்பட்ட பெயர்
- இடுகுறிப் பொதுபெயர் – எ.கா. – கல், மண், காற்று, காடு, கடல் – இவை யாவும் காரணமின்றி வழங்கப்பட்ட பொதுவான பொருள் அல்லது இடத்தைக் குறிக்கும் பெயர்கள்
- இடுகுறிச் சிறப்புப்பெயர் – எ.கா. – களிமண் – இது ஒரு குறிப்பிட்ட வகை மண்ணைக் குறிக்கிறது.
- காரணப்பெயர்
- காரணப் பொதுபெயர் – எ.கா. – வானவில் (வானில் வில் வடிவில் அமைந்ததால் அது வானவில்), பறவை (பறப்பதால் அது பறவை ஆயிற்று)
- காரணச் சிறப்புப்பெயர் – எ.கா. – மீன்கொத்திப்பறவை – இது மீனைக் கொத்தும் ஒரு குறிப்பிட்ட பறவை இனத்தைக் குறிக்கிறது.