சொல் என்றால் என்ன?
தமிழில், சில எழுத்துகள் மட்டும் ஓர் எழுத்தாக தனித்து நின்று பொருள் தரும்; அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும்.
எடுத்துக்காட்டு:
ஆ, ஈ, கை, தை, பூ, மா, பலா, வாழை, தமிழ், கல்வி, பள்ளி, நூல், கடல், நிலம், வானம், நீர், காற்று.
இவ்வாறு பொருள் தருமாறு வரும் ஓர் எழுத்து அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளின் தொகுப்பு சொல் எனப்படும்.
சொல்லின் வகைகள்
சொற்கள் நான்கு வகைப்படும். அவை;
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
பெயர்ச்சொல்
ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் (எ.கா. – அணில், மரம், கல்வி, பள்ளி, ஆண்டு, பசுமை, தலை)
வினைச்சொல்
ஒரு செயலைக் குறிக்கும் சொல் (எ.கா. – படி, எழுது, எழுதினான், படித்தான்)
இடைச்சொல்
பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும். தனித்து இயங்காது.
எடுத்துக்காட்டு – கு, ஐ, உம், இல்
- கு – பள்ளிக்குச் சென்றான்
- ஐ – புத்தகத்தை எடுத்தான் (தை = த் + ஐ)
- உம் – எண்ணும் எழுத்தும் (ண் + உம், த் + உம் )
- இல் – பேருந்தில் சென்றான் (தில் = த் + இல்)
உரிச்சொல்
பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல்லுடன் சேர்ந்து அவற்றை மிகுதிப்படுத்தும் பொருளில் வரும்.
எடுத்துக்காட்டு – மா, சால, தவ, நனி, கூர், கழி, கடி
- மா – மாநகரம் (மிகப்பெரிய நகரம் – மா எனும் உரிச்சொல் பெரிய எனும் பொருளில் வருகிறது)
- சால – சாலச்சிறந்தது (மிகவும் சிறந்தது)