1. எழுத்துக்களின் வகை
1. எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.
– எழுத்து வகைகள்-1, நூன்மரபு-1, எழுத்ததிகாரம்-1 – தொல்காப்பியம் – தொல்காப்பியர்
உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகள்
இளம்பூரணர் விளக்க உரை
- எழுத்து எனப்படுப – எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன,
- அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப – அகரமாகிய முதலை யுடையனவும் னகரமாகிய இறுவாயினையுடையனவுமாகிய முப்பதென்று சொல்லுப (ஆசிரியர்);
- சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடை – சார்ந்து வருதலாகிய இலக்கணத்தினையுடைய மூன்றும் அல்லாவிடத்து.
மூன்றும் ஆனவிடத்து முப்பத்து மூன்று என்று சொல்லுப என்றவாறு.
எ – டு: அ-ஆ-இ-ஈ-உ-ஊ-எ-ஏ-ஐ-ஒ-ஓ-ஒள; க்-ங்-ச்-ஞ்-ட்-ண்-த்-ந்-ப்-ம்-ய்-ர்-ல்-வ்-ழ்-ள்-ற்-ன் என வரும்.
நச்சினார்க்கினியர் விளக்க உரை
- எழுத்தெனப்படுப – எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன,
- அகரமுதல் னகரவிறுவாய் முப்பஃதென்ப – அகரமுதல் னகரம்ஈறாகக்கிடந்த முப்பதென்று சொல்லுவர் ஆசிரியர், சார்ந்துவரல்
- மரபின் மூன்றலங்கடையே – சார்ந்துவருதலைத் தமக்கு இலக்கணமாகவுடைய மூன்றும் அல்லாத இடத்து என்றவாறு.
எனவே, அம்மூன்றுங் கூடியவழி முப்பத்துமூன்றென்ப.
“அ – ஆ – இ – ஈ – உ – ஊ – எ – ஏ – ஐ – ஒ – ஓ – ஒள; க் – ங் – ச் – ஞ் – ட் – ண் – த் – ந் – ப் – ம் – ய் – ர் – ல் – வ் – ழ் – ள் – ற் – ன்” எனவரும்.
சார்பெழுத்துக்கள்
2. அவைதாம்,
குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும், எழுத்து ஓரன்ன.
– எழுத்து வகைகள்-2, நூன்மரபு-1, எழுத்ததிகாரம்-1 – தொல்காப்பியம்– தொல்காப்பியர்
இளம்பூரணர் விளக்க உரை
இஃது, மேல் சார்ந்துவரும் என்னப்பட்ட மூன்றற்கும் பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று.
- அவைதாம் – மேற் சார்ந்துவரும் எனப்பட்டவை தாம்,
- குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் – குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமும்
- என்ற முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன – (அவை) என்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளியும் என இவை மேற்சொல்லப்பட்ட முப்பது எழுத்தோடு ஒரு தன்மைய.
நச்சினார்க்கினியர் விளக்க உரை
இது மேற் சார்ந்துவருமென்ற மூன்றிற்கும் பெயரும் முறையும்
உணர்த்துதனுதலிற்று.
- அவைதாம் – மேற் சார்ந்துவரு மெனப்பட்டவைதாம்,
- குற்றியலிகரங் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் – குற்றியலிகரமுங் குற்றியலுகரமும் ஆய்தமுமென்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளிவடிவுமாம்;
- எழுத்தோரன்ன – அவையும் முற்கூறிய முப்பதெழுத்தோடு ஒருதன்மையாய் வழங்கும் என்றவாறு.