குருவிரொட்டி இணைய இதழ்

ஆடிக் குடத்தடையும் – பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடைப் பாடல் – காளமேகப் புலவர்


ஆடிக் குடத்தடையும் – பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடைப் பாடல் – காளமேகப் புலவர்

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளனவே யோது.

– காளமேகப் புலவர்

மேற்போக்கான சொல்லமைப்பிலே ஒன்றாகவும், ஆராய்ந்து பார்த்தால் இரு பொருள்படும்படியும் அமைந்துள்ள பாடல் சிலேடைப்பாடல் எனப்படும். இதற்கு இரட்டுற மொழிதல் என்றும் பெயர். செய்யுளில் வரும் சொற்களை நன்றாக ஆராய்ந்து பொருள்நயத்தை உணரவேண்டும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள காளமேகப்புலவரின் இப்பாடல், ஒரே பாடலாக இருப்பினும், நன்கு ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு சொல்லும் பாம்புக்கும் எள்ளுக்கும் பொருத்தமானதாக அமைகிறது. அதாவது, பாம்பைப் பற்றி விளக்குவதுபோல் அமைந்த இதேபாடல், எள்ளைப் பற்றி விளக்குவதாகவும் அமைகிறது.

புலியூர்க் கேசிகன் உரை

பாம்பு:

பாம்பு, படமெடுத்து ஆடியபின் குடத்திலே சென்று அடைந்திருக்கும்; ஆடுகின்ற போதிலே, சீத்துப் பூத்தென்று இரைச்சலிடும்; குடத்தை மூடித்திறந்தால், தன் தலையை வெளியே உயர்த்திக்காட்டும்; விரைந்து அதன் தலையைப் பற்றிக்கொண்டால், பரபரென்று சுற்றிக்கொள்ளும். உலகிற் பிளவுபட்ட நாக்கும் அதற்கு உண்டாம்.

எள்:

செக்கிலே ஆடி, எண்ணெயாகிக் குடத்திலே அடைந்திருக்கும்; செக்கிலே ஆடும்பொழுதிலேயே இரைச்சல் செய்யும்; விரைய மண்டையிலேயே தேய்த்துக்கொண்டால், பரபரவெனக் குளிர்ச்சி உண்டாக்கும்; உலகிலே பிண்ணாக்கும் அதனிடத்தே உண்டாகும்; (இதனால்) அடைந்திடும் பாம்பும் எள்ளும் சமமாகும் என்று சொல்லுக.