காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை – ககரவருக்கப் பாட்டு – வித்தாரச்செய்யுள் – தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர்
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
– ககரவருக்கப் பாட்டு, வித்தாரச்செய்யுள், தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர்
புலியூர்க் கேசிகன் உரை
செய்யுள் அமைதியுடன் வித்தாரமாகப் பாடியவை வித்தாரச்செய்யுட்கள் ஆகும். நுட்பமாகப் பொருளைக்கண்டு உணர்தல் வேண்டும்.
“ககர வருக்கமே முற்றிலும் அமைந்து வருமாறு ஒரு செய்யுளைச் செய்க” எனக் கேட்டவர் வியக்குமாறு சொல்லியது இது.
- காக்கைக்கு ஆகா கூகை – காக்கைக்கு கூகையை இரவில் வெல்லுதற்கு ஆகாது.
- கூகைக்கு ஆகா காக்கை – கூகைக்கு காக்கையை பகலில் வெல்லுதற்கு ஆகாது. அதனால்,
- கோக்கு கூ காக்கைக்கு – அரசனுக்காக அவன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பற்றுகைக்கும்
- கொக்கு ஒக்க – கொக்கைக் போலத் தகுதியான சமயம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.
- கைக்கைக்கு – பகையை எதிர்த்து
- காக்கைக்கு – காப்பாற்றுவதற்கு
- கைக்கு ஐக்கு ஆகா – சாமர்த்தியமான தலைவனுக்கும் இயலாதாகிப் போய்விடும்.
காக்கைக்கு கூகையை (ஆந்தை) இரவில் வெல்லுதற்கு ஆகாது. கூகைக்கு காக்கையை பகலில் வெல்லுதற்கு ஆகாது. அதனால், அரசனுக்காக அவன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பற்றுகைக்கும் கொக்கைக் போலத் தகுதியான சமயம் வரும்வரை காத்திருக்க வேண்டும். பகையை எதிர்த்து காப்பாற்றுவதற்கு சாமர்த்தியமான தலைவனுக்கும் இயலாதாகிப் போய்விடும்.