நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி – மூதுரை – ஔவையார்
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
– மூதுரை (ஔவையார்)
விளக்கம்
நிலைபெற்று சோர்ந்துவிடாமல் வளர்கின்ற தென்னையானது தன் அடியால் உண்ட தண்ணீரை தன் முடியாலே சுவையுள்ள இளநீராக்கித் தானே தருதலால், நல்ல பண்புடைய ஒருவனுக்கு உதவி செய்தால் அந்த உதவியை அவன் எப்பொழுது செய்வானோ என்று ஐயம் கொள்ள வேண்டியதில்லை.
அதாவது, நற்பண்புடையவன் ஒருவனுக்கு உதவி செய்தால், அவனும் சிறந்த உதவியை விரைந்து செய்வான்.