சென்னை – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 2 – ரா.பி. சேது
இக் காலத்தில் தமிழ் நாட்டில் தலைசிறந்து விளங்கும் நகரம் சென்னை மாநகரம். முந்நூறு ஆண்டுகட்கு முன்னே சென்னை ஒரு பட்டினமாகக் காணப்படவில்லை. கடற்கரையில் துறைமுகம் இல்லை; கோட்டையும் இல்லை. பெரும்பாலும் மேடு பள்ளமாகக் கிடந்தது அவ்விடம். இன்று சென்னையின் அங்கங்களாக விளங்கும் மயிலாப்பூரும், திருவல்லிக்கேணியும் கடற்கரைச் சிற்றூர்களாக அந் நாளில் காட்சி யளித்தன.
திருமயிலை / மயிலாப்பூர்
சென்னையிலுள்ள மயிலாப்பூர் மயிலோடு தொடர்புடையது. மயிலாப்பூரிலுள்ள கபாலீச்சுரம் என்னும் சென்னை சிவாலயம் மிகப் பழமை வாய்ந்தது. திருஞானசம்பந்தர் அதனைப் பாடியுள்ளார்.
திருவல்லிக்கேணி
ஊற்று நீரால் நிறையும் கேணியும் கிணறும் சில ஊர்களைத் தோற்றுவித்துள்ளன. சென்னை மாநகரிலுள்ள திருவல்லிக்கேணியும், நெல்லை நாட்டிலுள்ள நாரைக்கிணறும் இவ்வுண்மைக்குச் சான்றாகும்.
திருமயிலைக்கு அருகேயுள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி என்பது அல்லிக்குளம். அல்லி மலர்கள் அழகுற மலர்ந்து கண்ணினைக் கவர்ந்த கேணியின் அருகே எழுந்த ஊர் அல்லிக்கேணி என்று பெயர் பெற்றது. அங்கே, பெருமாள், கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருவல்லிக்கேணியாயிற்று.
சென்னை / சென்னப்பட்டினம்
ஆங்கிலக் கம்பெனியார், கோட்டை கட்டி வர்த்தகம் செய்யக் கருதியபோது, ஒரு நாயக்கருக்கு உரியதாக இருந்த சில இடங்களை அவரிடமிருந்து வாங்கினர்; அவர் தந்தையார் பெயரால் அதனைச் சென்னப்பட்டினம் என்று வழங்கினர். அவ்வூரே இன்று சென்னப் பட்டினமாய் விளங்குகின்றது.
நரிமேடு, மண்ணடி
கம்பெனியார் கட்டிய கோட்டை வளர்ந்தோங்கி விரிவுற்றது. மேடு பள்ளமெல்லாம் பரந்த வெளியாயின. நரி மேடு இருந்த இடத்தில் இப்பொழுது பெரிய மருத்துவ சாலை இருக்கின்றது.
திருவல்லிக்கேணிக்கு வடக்கே மேடும் பள்ளமுமாகப் பல இடங்கள் இருந்தன, அவற்றுள் ஒன்று நரிமேடு, இன்று மண்ணடி என வழங்கும் இடம் ஒரு மேட்டின் அடியில் பெரும்பள்ளமாக அந் நாளிலே காணப்பட்டது.
பேட்டை
மண்ணடியின் அருகே இருந்த பெருமேடு தணிந்து பெத்துநாய்க்கன் பேட்டையாயிற்று. ஆங்கிலக் கம்பெனியார் ஆதரவில் பல பேட்டைகள் எழுந்தன. அவற்றுள் சிந்தாதிரிப் பேட்டை, தண்டையார்ப்பேட்டை முதலிய ஊர்கள் சிறந்தனவாகும்.
தொழில்களால் சிறப்புறும் ஊர்கள் பேட்டை எனப்படும். சென்னை மாநகரத்தில் சில பேட்டைகள் உண்டு, தண்டையார் பேட்டை, வண்ணார் பேட்டை, சிந்தாதிரிப் பேட்டை முதலிய இடங்கள் கைத்தொழிலின் சிறப்பினால் பேட்டை என்று பெயர் பெற்றன. தண்டையார்ப் பேட்டையில் இப்பொழுதும் நெய்யுந்தொழில் நடந்து வருகிறது. கம்பெனியார் காலத்தில் சில குறிப்பிட்ட ஆடைகளைக் கைத்தறியின் மூலமாகச் செய்வதற்கென்று ஏற்படுத்தப்பட்ட ஊர் சிந்தாதிரிப்பேட்டையாகும்.
பாக்கம்
இங்ஙனம் விரிவுற்ற நகரின் அருகே பல பாக்கங்கள் எழுந்தன. புதுப் பாக்கம், சேப் பாக்கம், கீழ்ப் பாக்கம், நுங்கம் பாக்கம் முதலிய சிற்றூர்கள் தோன்றி, நாளடைவில் நகரத்தோடு சேர்ந்தன. எனவே, சென்னையில் ஆதியில் அமைந்தது கோவில்; அதன் பின்னே எழுந்தது கோட்டை; அதைச் சார்ந்து பேட்டையும் பாக்கமும் பெருகின. அனைத்தும் ஒருங்கு சேர்ந்து சென்னை மாநகரமாகச் சிறந்து விளங்குகின்றது.
கடற்கரைச் சிற்றூர்கள் பாக்கம் என்று பெயர் பெறும். சென்னை மாநகரின் அருகே சில பாக்கங்கள் உண்டு. கோடம் பாக்கம், மீனம் பாக்கம், வில்லி பாக்கம் முதலிய
ஊர்கள் நெய்தல் நிலத்தில் எழுந்த பாக்கம் குடியிருப்பேயாகும். சில காலத்திற்கு
முன் தனித் தனிப் பாக்கங்களாய்ச் சென்னையின் அண்மையிலிருந்த சிற்றூர்கள் இப்போது அந்நகரின் அங்கங்களாய்விட்டன. புதுப் பாக்கம், புரசை பாக்கம், சேப் பாக்கம், நுங்கம் பாக்கம் முதலிய ஊர்கள் சென்னை மாநகரோடு சேர்ந்திருக்கின்றன.
– நூல்: தமிழகம் – ஊரும் பேரும் – ரா.பி. சேது