சென்னைத் தமிழில் செந்தமிழ் – வட்டார வழக்குச் சொற்கள்

chennai tamil

சென்னைத் தமிழ் (Chennai Tamil) பல புரியாத வேற்று மொழிச் சொற்களை உள்ளடக்கியது என நம்மில் பலர் நினைக்கலாம். அது ஓரிரண்டு சொற்களில் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான சொற்கள், செந்தமிழில் (Classical Tamil) இருந்து  வட்டார வழக்குச் சொல்லாக மருவிய, மரூஉச் சொற்களே அன்றி வேறில்லை. அப்படிப் பட்ட சில சென்னை (Chennai) வட்டார வழக்குச் சொற்களைப் பற்றிப் பார்ப்போம்.

கதிரவன் தமிழகத்தின் தென் பகுதியில் இருந்து முதன் முதலாக சென்னைக்கு வருகிறான். ஒரு சிறிய உணவகத்திற்கு செல்கிறான். அந்த உணவகத்தின் உரிமையாளர், கடைக்கு அருகில் விளையாடிக் கொண்டு இருக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் தன் மகனை அழைத்துக் கேட்கிறாள். 

இன்னாடா, உஸ்குல் போனியா… இல்லியா… இம்மா நேர்மா, சொம்மா இங்கயே ஒலாத்தினுகுற….  ஊட்டாண்ட போய் பொஸ்தகம் எத்து படிடா …. 

அதற்கு மகன் சொல்கிறான்…

 இல்லயெம்மா… இன்னிக்கி… உஸ்குலாண்ட, பைய தாராந்துட்டேன்…. இன்னாப் பன்றதுன்னே, ஒண்ணியும் பிரியிலயெம்மா…

கோபத்துடுடன், சிறுவனின் அம்மா, கூறுகிறாள்…

கைலாத்து…. எப்ப பாரு… எதயாவுது, தாராந்துன்னு வந்துர்து பாரு…. பன்னாட …. 

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கதிரவனுக்கு,  தான் கேட்பது தமிழ் தானா என்ற ஐயம் வந்தது. 

கதிரவனுக்கு வந்த சந்தேகம் நம்மில் பலருக்கு வரலாம். இந்த சொற்களை, ஒவ்வொன்றாக பார்போம்.

  • இன்னாடா:        என்னடா
  • உஸ்குல்:            ஸ்கூல் (ஆங்கிலச் சொல் – School) – பள்ளிக் கூடம்
  • போனியா:        போனாயா
  • இல்லியா:         இல்லையா
  • இம்மா நேர்மா:       இவ்வளவு நேரமாக – “இம்மா”  என்ற சொல்லில், “மா” என்ற எழுத்து, அதிகமான, மிகையான, பெரிய, அளவைக் குறிக்கும், உரிச்சொல் ஆகும்.  உதாரணமாக, மாநகரம், மாமன்னன், என்ற சொற்களில், “மா” என்ற எழுத்து, பெரிய, என்ற பொருளில் வரும், உரிச்சொல் ஆகும். எனவே, “இம்மா நேரம்” என்றால், இந்த அளவுக்கு மிகுந்த நேரமாக என்று பொருள் படும்.
  • சொம்மா:          சும்மா
  • ஒலாத்தினுகுற:       உலாத்திக் கொண்டு – உலாவிக் கொண்டு இருக்கிறாய்.
  • ஊட்டாண்ட:          வீட்டு அண்டையில் – வீட்டிற்கு அண்டைப் பகுதியில்.
  • பொஸ்தகம்:        புத்தகம்
  • எத்து:        எடுத்து
  • இல்லயெம்மா:     இல்லை அம்மா.
  •  இன்னிக்கி:      இன்றைக்கு
  • உஸ்குலாண்ட:         ஸ்கூல் (ஆங்கிலச் சொல்) அண்டைப் பகுதியில், அதாவது பள்ளிக் கூடம் அண்டைப் பகுதியில் / அருகில்
  • பைய:    பையை
  • தாராந்துட்டேன்:       தாரை வார்த்து விட்டேன். அந்தப் பையை, அந்தச் சிறுவன் யாருக்கும் அவனாக முன் வந்து, தாரை வார்த்து கொடுக்கவில்லையென்றாலும், தொலைத்து விட்டேன் என்பதை, சென்னை வட்டார வழக்குத் தமிழில், தாரை வார்த்துவிட்டேன் (அதாவது தாராந்துட்டேன்) என்று சொல்வது வழக்கம்.
  • இன்னாப் பண்ரதுன்னே:        என்ன பண்ணுவது என்றே – என்ன செய்வது என்றே.
  • ஒண்ணியும் பிரியிலயெம்மா:          ஒன்றும் புரியவில்லை அம்மா.
  • கைலாத்து:       கையால் அற்றது – சாரமற்றது – எதையும் செய்ய இயலாதது – ஒன்றுக்கும் உதாவதது.
  • பன்னாட:       பன்னாடை [பனை + ஆடை]  = பனை, தெங்கு இவற்றின் மட்டைகளை மரத்தோடு பிணைத்து நிற்கும் வலைத்தகடு போன்ற நார்ப்பொருள்; இழை நெருக்க மில்லாத் துணிவகை; நல்லதைத் தள்ளி அல்லதைக் கொள்ளும் பேதை அல்லது முட்டாள். பன்னாடை நெய்யரியாகப் (வடிகட்டி) பயன்படுத்தப் பெறுவதாலும், சாற்றைப்போக்கிச் சக்கையைப் பற்றிக் கொள்வதாலும், பயனுள்ளதை விட்டுப் பயனற்ற செய்தியைப் பற்றிக் கொள்ளும் பேதைக்குவமையாயிற்று.

இதில் குறிப்பாக, ஊட்டாண்ட, இம்மா, ஒலாதினுகுற, தாரந்த்துட்டேன், கைலாத்து, பன்னாட என்ற சொற்களைப் பார்க்கும்போது, தமிழகத்தின் பிற பகுதிகளில் வழக்கத்தில் இல்லாத, செந்தமிழ்ச் சொற்கள், சென்னைத் தமிழில், இன்றும் பயன்பாட்டில் உள்ளதை நம்மால் அறிய முடிகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.