குருவிரொட்டி இணைய இதழ்

சென்னைத் தமிழில் செந்தமிழ் – வட்டார வழக்குச் சொற்கள்

சென்னைத் தமிழ் (Chennai Tamil) பல புரியாத வேற்று மொழிச் சொற்களை உள்ளடக்கியது என நம்மில் பலர் நினைக்கலாம். அது ஓரிரண்டு சொற்களில் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான சொற்கள், செந்தமிழில் (Classical Tamil) இருந்து  வட்டார வழக்குச் சொல்லாக மருவிய, மரூஉச் சொற்களே அன்றி வேறில்லை. அப்படிப் பட்ட சில சென்னை (Chennai) வட்டார வழக்குச் சொற்களைப் பற்றிப் பார்ப்போம்.

கதிரவன் தமிழகத்தின் தென் பகுதியில் இருந்து முதன் முதலாக சென்னைக்கு வருகிறான். ஒரு சிறிய உணவகத்திற்கு செல்கிறான். அந்த உணவகத்தின் உரிமையாளர், கடைக்கு அருகில் விளையாடிக் கொண்டு இருக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் தன் மகனை அழைத்துக் கேட்கிறாள். 

இன்னாடா, உஸ்குல் போனியா… இல்லியா… இம்மா நேர்மா, சொம்மா இங்கயே ஒலாத்தினுகுற….  ஊட்டாண்ட போய் பொஸ்தகம் எத்து படிடா …. 

அதற்கு மகன் சொல்கிறான்…

 இல்லயெம்மா… இன்னிக்கி… உஸ்குலாண்ட, பைய தாராந்துட்டேன்…. இன்னாப் பன்றதுன்னே, ஒண்ணியும் பிரியிலயெம்மா…

கோபத்துடுடன், சிறுவனின் அம்மா, கூறுகிறாள்…

கைலாத்து…. எப்ப பாரு… எதயாவுது, தாராந்துன்னு வந்துர்து பாரு…. பன்னாட …. 

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கதிரவனுக்கு,  தான் கேட்பது தமிழ் தானா என்ற ஐயம் வந்தது. 

கதிரவனுக்கு வந்த சந்தேகம் நம்மில் பலருக்கு வரலாம். இந்த சொற்களை, ஒவ்வொன்றாக பார்போம்.

இதில் குறிப்பாக, ஊட்டாண்ட, இம்மா, ஒலாதினுகுற, தாரந்த்துட்டேன், கைலாத்து, பன்னாட என்ற சொற்களைப் பார்க்கும்போது, தமிழகத்தின் பிற பகுதிகளில் வழக்கத்தில் இல்லாத, செந்தமிழ்ச் சொற்கள், சென்னைத் தமிழில், இன்றும் பயன்பாட்டில் உள்ளதை நம்மால் அறிய முடிகிறது.