குருவிரொட்டி இணைய இதழ்

அழிவினவை நீக்கி ஆறுய்த்து- குறள்: 787


அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. – குறள்: 787

– அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால்



கலைஞர் உரை

நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை
நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத்தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நண்பன் கேடுதரும் தீயவழிகளில் ஒழுகுங்கால் அவற்றினின்று விலக்கி; நல்வழிகளில் ஒழுகாக்கால் அவற்றிற் செலுத்தி; தெய்வத்தாற் கேடு வந்தவிடத்து அதை நீக்க முடியாமையின், அத்துன்பத்தைத் தானும் உடன் நுகர்ந்து வருந்துவதே; ஒருவனுக்கு நட்பாவது.



மு. வரதராசனார் உரை

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.



G.U. Pope’s Translation

Friendship from ruin saves, in way of virtue keeps; In troublous time, it weeps with him who weeps.

 – Thirukkural: 787, Friendship, Wealth