குருவிரொட்டி இணைய இதழ்

இருபுனலும் வாய்ந்த மலையும் – குறள்: 737


இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு.
– குறள்: 737

– அதிகாரம்: நாடு, பால்: பொருள்



கலைஞர் உரை

ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத்
தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மேல்நீர் கீழ்நீர் எனப்பட்ட இருவகை நீர்வளமும், பலவகையிலும் பயன்படுவதற்கேற்றதாய் வாய்ந்த மலையும், அதனின்று வரும் ஆறும், இயற்கையுஞ் செயற்கையுமாகிய இருவகை வலிய அரணும் சிறந்த நாட்டிற்குரிய உறுப்புகளாம்.



மு. வரதராசனார் உரை

ஊற்றும் மழையுமாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும், அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும், வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாம்.



G.U. Pope’s Translation

Waters from rains and springs, a mountain near, and waters thence; These make a land, with fortress sure defence.

 – Thirukkural: 737, The Land, Virtues