கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும். – குறள்: 663
– அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்
கலைஞர் உரை
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மறைத்துச் செய்ய வேண்டிய வினைகளை முடிந்த பின்னரே வெளிப்படுமாறு கமுக்கமாய்ச் செய்வதே வினைத்திட்பமாம்; அங்ஙனமன்றி அத்தகைய மருமவினைகள் இடையில் வெளிப்படுமாயின், நீக்க முடியாத் துன்பந் தருவனவாம்.
மு. வரதராசனார் உரை
செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாகச் செய்யும் தகுதியே ஆண்மையாகும்; இடையில் வெளிப்பட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
G.U. Pope’s Translation
Man’s fitting work is known but by success achieved;
In midst the plan revealed brings ruin ne’er to be retrieved.
– Thirukkural: 663, Power of Action, Wealth