கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல். – குறள்: 668
– அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்
கலைஞர் உரை
மனக்குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தெளிவாக எண்ணித்துணிந்த வினை முயற்சியில் பின்பு மன அசைவில்லாதும் காலந்தாழ்க்காதும் விரைந்து ஊக்கமாகச் செய்க.
மு. வரதராசனார் உரை
மனம் கலங்காமல் ஆராய்ந்து துணிந்து ஏற்ற தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.
G.U. Pope’s Translation
What clearly eye discerns as right, with steadfast will, And mind unslumbering , that should man fulfil.
– Thirukkural: 668, Power of Action, Wealth