கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல். – குறள்: 279
– அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம்
கலைஞர் உரை
நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து
தோன்றும் யாழ், இசை இன்பம் பயக்கும். அது போலவே மக்களின்
பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள
வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அம்பு வடிவில் நேராயிருந்தாலும் செயலிற் கொடியது; யாழ் தண்டால் வளைந்ததேனும் செயலால் இனியது; அங்ஙனமே தவஞ்செய்வாருள்ளும் யார் கொடியர் யார் நேர்மையர் என்பதை , அவரவர் கோலத்தாற் கொள்ளாது செயல்வகையாலேயே அறிந்துகொள்க.
மு. வரதராசனார் உரை
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின் பண்புகளையும் செயல் வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.
G.U. Pope’s Translation
Cruel is the arrow straight, the crooked lute is sweet, Judge by their deeds the many forms of men you meet.
– Thirukkural: 279, Inconsistent Conduct, Virtues
Be the first to comment