குருவிரொட்டி இணைய இதழ்

கூறாமை நோக்கி குறிப்புஅறிவான் – குறள்: 701


கூறாமை நோக்கி குறிப்புஅறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி.
– குறள்: 701

– அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார்
என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கு அணியாவான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசன் கருதிய கருமத்தை அவன் கூறாமலே அவன் முகத்தை நோக்கி அறியவல்ல அமைச்சன்; உலகுள்ள அளவும் ஒருபோதும் வற்றாத கடலைத் தன்னுட்கொண்ட ஞாலத்தில் வாழ்வார்க்கு ஓர் அணிகலமாம்.



மு. வரதராசனார் உரை

ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்கு ஓர் அணிகலன் ஆவான்.



G.U. Pope’s Translation

Who knows the sign, and reads unuttered thought, the gem is he,
Of earth round traversed by the changeless sea.

 – Thirukkural: 701, The Knowledge of Indication, Wealth