நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. – குறள்: 953
– அதிகாரம்: குடிமை, பால்: பொருள்
கலைஞர் உரை
முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
எக்காலத்துந் திரிபில்லாது ஒரே சரியாய் ஒழுகும் உயர்குடிப் பிறந்தார்க்கு; இரவலரும் இரப்போரும் வறிய வுறவினரும் தம்மையடைந்தபோது, முகம் மலர்தலும் இயன்றன கொடுத்தலும் இன்சொற் சொல்லுதலும் தாழ்வாகக் கருதாமையும் ஆகிய நான்கு குணமும்; இயல்பாக வுரிய கூறென்பர் அறிந்தோர்.
மு. வரதராசனார் உரை
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்ல பண்புகள் என்பர்.
G.U. Pope’s Translation
The smile, the gift, the pleasant word, unfailing courtesy: These are the signs, they say, of true nobility.
– Thirukkural: 953, Nobility, Wealth
Be the first to comment