நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு. – குறள்: 960
– அதிகாரம்: குடிமை, பால்: பொருள்.
கலைஞர் உரை
தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும்
ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவன் தனக்கு இம்மை மறுமை நன்மைகளை வேண்டுவானாயின்; தான் நாணமுடையவனா யிருத்தல் வேண்டும்; தன் உயர்குடிப் பிறப்பைக் காத்துக் கொள்ள விரும்புவானாயின், பெரிய ரெல்லாரிடத்தும் பணிவுடைய வனாயிருத்தல் வேண்டும்.
மு. வரதராசனார் உரை
ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும்; குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.
G.U. Pope’s Translation
Who seek for good the grace of virtuous shame must know;
Who seek for noble name to all must reverence show.
– Thirukkural: 960, Nobility, Wealth.