நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவு ஆண்மை கடை. – குறள்: 331
– அதிகாரம்: நிலையாமை, பால்: அறம்
கலைஞர் உரை
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை, மிக இழிவானதாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நிலையில்லாத பொருட்களையும் நிலைமைகளையும் நிலையானவை யென்று கருதும் பேதைமை, கடைப்பட்ட அறியாமையாம்.
மு. வரதராசனார் உரை
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
உதாரணப்பட விளக்கம்
படத்தில் உள்ள மணல் ஓவியம் நிலையற்றது; வரைந்த சில நிமிடங்களிலேயே காற்று வீசினால் மறைந்து விடும் தன்மையுடையது. அதன் நிலையற்ற தன்மையை உணராமல், அந்த மணல் ஓவியம் என்றென்றும் நிலைக்கும் என்று கருதினால் அதுவே அறியாமை. அதுபோல நிலையற்ற வாழ்க்கையை நிலையானாது என்று நாம் நம்பினால் அதுதான் அறியாமையின் உச்சம்.