பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு. – குறள்: 735
– அதிகாரம்: நாடு, பால்: பொருள்
கலைஞர் உரை
பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும் அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததேசிறந்த நாடாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் பல்வேறு மாறுபாட்டுக் கூட்டங்களும்; அரசன் குடும்பத்துள்ளும் குடிகளுள்ளுமிருந்து நாட்டைப் பகைவர்க்குக் காட்டிக்கொடுத்துக் கேடுசெய்யும் அகப்பகைவரும்; நாட்டிற்குள்ளிருந்து சமையம் வாய்க்கும் போதெல்லாம் போராலுங் கொள்ளையாலும் அரசனையும் குடிகளையுந் துன்புறுத்தும் அடங்காச் சிற்றரண் தலைவரும்; இல்லாததே (அமைதிக் கேற்ற) நல்ல நாடாவது.
மு. வரதராசனார் உரை
பலவகையாக மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
G.U. Pope’s Translation
From factions free, and desolating civil strife, and band Of lurking murderers that king afflict, that is the land.
– Thirukkural: 735, The Land, Wealth