பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். – குறள்: 599
– அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு; கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
யானை விலங்குகளெல்லாவற்றுள்ளும் உருவத்திற் பெரியதும், அதோடு கூரிய கொம்புள்ளதுமாயினும்; உருவப் பருமையும் கொம்புமில்லாத புலி தன்னைத்தாக்கின், அஞ்சி எதிர்க்காது அதனாற் கொல்லப்படும்.
மு.வரதராசனார் உரை
யானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான கொம்புகளை உடையது; ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.
G.U. Pope’s Translation
Huge bulk of elephant with pointed tusk all armed,
When tiger threatens shrinks away alarmed!
– Thirukkural: 599, Energy, Wealth