செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்து
காக்கின்என் காவாக்கால் என். – குறள்: 301
– அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம்
கலைஞர் உரை
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே
சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன?
காக்காவிட்டால் என்ன?
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சினம் தாக்கக் கூடிய எளிய இடத்தில் அது எழாதவாறு அருளால் அல்லது அன்பால் தடுப்பவனே உண்மையில் அதைத் தடுப்பவனாவான்; அல்லாத வலிய இடத்தில் அது தானே எழாது அடங்குதலால் அதைத் தடுத்தாலென், தடுக்காவிட்டாலென்? இரண்டும் ஒன்றுதானே!
மு. வரதராசனார் உரை
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன்; பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
G.U. Pope’s Translation
Where thou hast power thy angry will to work, thy wrath restrain; Where power is none, what matter if thou check or give it rein?
– Thirukkural: 301, Not being Angry, Virtues