தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். குறள்: 619
– அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவன் எடுத்துக்கொண்ட முயற்சி தெய்வஏற்பாடாகிய ஊழ்வலியால் வெற்றி பெறாது போயினும், அம்முயற்சிக்கு உடம்பு பட்ட பாட்டின் அளவு பயன்தரும், தராமற்போகாது.
மு. வரதராசனார் உரை
ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.