குருவிரொட்டி இணைய இதழ்

தூய்மை துணைமை துணிவுஉடைமை – குறள்: 688


தூய்மை துணைமை துணிவுஉடைமை இம்மூன்றின்
வாய்மை வழிஉரைப்பான் பண்பு.
– குறள்: 688

– அதிகாரம்: தூது, பால்: பொருள்



கலைஞர் உரை

துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத்
தேவையானவைகளாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மண் பெண் பொன் என்னும் மூவகை யாசையுமின்றித் தூயவனாயிருந்தாலும்; வேற்றரசரின் அமைச்சரைத் துணையாகவுடைமையும்; சொல்ல வேண்டிய செய்தியை அஞ்சாது சொல்லும் திடாரிக்கமும்; இம்மூன்றொடு கூடிய மெய்ம்மையும்; தன் அரசன் சொல்லி விடுத்த செய்தியை அவன் சொன்னவாறே வேற்றரசரிடம் சென்று கூறும் தூதனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளாம்.



மு. வரதராசனார் உரை

தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.



G.U. Pope’s Translation

Integrity, resources, soul determined, truthfulness; Who rightly speaks his message must these marks possess.

 – Thirukkural: 688, The Envoy, Wealth