உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். குறள்: 949
– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்
கலைஞர் உரை
நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சித்த மருத்துவத்தைக் கற்றவன், நோயாளியின் அளவையும் அவனது நோயின் அளவையும் காலத்தின் நிலைமையையும் நோக்கி, அவற்றிற் கேற்றவாறு தன் நூலறிவையும் பட்டறிவையும் பயன்படுத்தி மருத்துவஞ் செய்க.
மு. வரதராசனார் உரை
மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.