ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. – குறள்: 1038
– அதிகாரம்: உழவு, பால்: பொருள்
கலைஞர் உரை
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர்
பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பயிர் செய்யவேண்டிய நிலத்தை ஆழவுழுவதினும், அதற்கு வளமான உரமிடுதல் நல்லதாம்; அந்நிலத்தில் விதைத்து முளைத்து அல்லது நாற்று நட்டுப் பயிர் வளரும்போது முற்றுங் களையெடுத்தபின்; உரியநாள் முறைப்படி நீர் பாய்ச்சுவதினும், அப்பயிர் விளைந்து கதிரறுத்துப் போரடித்துக் கூலம் வீடு வந்து சேரும் வரை தக்க காவல் செய்தல் மிக நல்லதாம்.
மு. வரதராசனார் உரை
ஏர் உழுதலைவிட எரு இடுதல் நல்லது; இந்த இரண்டும் செய்து களை நீக்கிய பிறகு, நீர் பாய்ச்சுதலை விடக் காவல் காத்தல் நல்லது.
G.U. Pope’s Translation
To cast manure is better than to plough;
Weed well; to guard is more than watering now.
– Thirukkural: 1038, Agriculture, Wealth