அந்த இடம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி
அப்பா என்னை
அழைத்துச் சென்றார்.
அங்கு ஓரிடம்.
அங்கி ருந்த
குயிலும், மயிலும்
ஆடித் திரிந்தன.
பொல்லா நரியும்,
புனுகு பூனை
எல்லாம் நின்றன.
குட்டி மான்கள்,
ஒட்டைச் சிவிங்கி
கூட இருந்தன.
குரங்கு என்னைப்
பார்த்துப் பார்த்துக்
“குறுகு” றென்றது.
யானை ஒன்று
காதைக் காதை
ஆட்டி நின்றது.
முதலை தலையைத்
தூக்கிப் பார்த்து
மூச்சு விட்டது !
கரடி கூட
உறுமிக் கொண்டே
காலைத் தூக்கிற்று !
சிறுத்தை ஒன்று
கோபத் தோடு
சீறிப் பார்த்தது !
அங்கு எங்கள்
அருகி லேயே
சிங்கம் நின்றது !
கரடி, சிங்கம்
புலியைக் கண்டேன்;
கண்டும் பயமில்லை.
சூர னைப்போல்
நின்றி ருந்தேன்;
துளியும் பயமில்லை !
சென்ற அந்த
இடம் உனக்குத்
தெரிய வில்லையா ?
மிருகக் காட்சி
சாலை தானே;
வேறொன்றும் இல்லை !
Be the first to comment