குருவிரொட்டி இணைய இதழ்

பட்டணம் போகிற மாமா – அழ. வள்ளியப்பா – சிறுவர் பாடல்கள்

பட்டணம் போகிற மாமா – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி


பட்டணத்தைப் பார்க்கப்போகும்
சின்னமாமா – இந்தப்
பையனைநீ மறந்திடாதே,
சின்னமாமா.

பாப்பாவுக்கு ஊதுகுழல்
சின்னமாமா – அந்தப்
பட்டணத்தில் வாங்கிவாராய்,
சின்னமாமா.

அக்காளுக்கு ரப்பர்வளை
சின்னமாமா – அங்கே
அழகழகாய் வாங்கிவாராய்,
சின்னமாமா.

பிரியமுள்ள அம்மாவுக்கு,
சின்னமாமா – நல்ல
பெங்களூருச் சேலைவேண்டும்,
சின்னமாமா.

அப்பாவுக்குச் சட்டைத்துணி
சின்னமாமா – ஓர்
ஆறுகெஜம் வாங்கிவாராய்,
சின்னமாமா.

தாத்தாவுக்கு ஊன்றிச்செல்ல
சின்னமாமா – நல்ல
தந்தப்பிடிக் கம்புவேண்டும்,
சின்னமாமா.

பல்லேயில்லாப் பாட்டிக்குநீ
சின்னமாமா – இரு
பல்வரிசை வாங்கிவாராய்,
சின்னமாமா.

எனக்கும்ஒரு “சைக்கிள்”வண்டி
சின்னமாமா – நீ
இல்லையென்றால் விடவேமாட்டேன்,
சின்னமாமா.

சொன்னதெல்லாம் மறந்திடாமல்
சின்னமாமா – உனது
துணியைச்சுற்றி முடிச்சுப்போடு,
சின்னமாமா!