பொங்கல் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல்
வெள்ளை யெல்லாம் அடித்துவைத்து,
வீட்டை நன்கு மெழுகிவைத்து,
விடியும் போதே குளித்துவிட்டு,
விளக்கு ஒன்றை ஏற்றிவைத்து,
கோல மிட்ட பானையதில்
கொத்து மஞ்சள் கட்டிவைத்து,
அந்தப் பானை தன்னைத்தூக்கி
அடுப்பில் வைத்துப் பாலைஊற்றிப்
பொங்கிப் பாலும் வருகையிலே
“பொங்க லோபால் பொங்க”லென்போம்.
தேங்கா யோடு கரும்பும்,சோறும்
தெய்வத் துக்குப் படைத்துவைத்து,
ஒன்று சேர்ந்து உண்டிடுவோம்;
ஓடி ஆடிப் பாடிடுவோம்.