தவளையாரே – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி
தத்தித் தத்தி ஓடிவரும்
தவளையாரே – கொஞ்சம்
தயவு செய்து நின்றிடுவீர்
தவளையாரே.
சுத்த மாகத் தினம்குளித்தும்
தவளையாரே – உடல்
சொறி சொறியாய் இருப்பதேனோ
தவளையாரே ?
பூச்சி புழு பிடித்துவரும்
தவளையாரே – உம்மைப்
பிடித்துப் பாம்பு தின்பதேனோ?
தவளையாரே.
மாரிக் காலம் வந்து விட்டால்
தவளையாரே – ஏனோ
வறட்டுக் கத்தல் கத்துகிறீர்
தவளையாரே?
நீருக் குள்ளே நீச்சலடிக்கும்
தவளையாரே – இங்கே
நிலத்தில் வந்து குதிப்பதேனோ
தவளையாரே ?
ஊமை போல இருப்ப தேனோ
தவளையாரே? – சும்மா
உருண்டைக் கண்ணால் பார்ப்பதேனோ
தவளையாரே?