சந்திரகிரகணம்
இன்று இரவு (27-07-2018, வெள்ளிக்கிழமை) இந்த நூற்றாண்டின், மிக நீண்ட சந்திரகிரகணத்தைக் காணலாம். விண்ணில் காணற்கரிய இந்த நிகழ்வு செந்நிலா (Red Moon / Blood Moon) என அழைக்கப்படுகிறது.
சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழும் நிகழ்வே சந்திரகிரகணம் ஆகும்.
செந்நிலா
வழக்கமாக, கிரகணம் முழமை அடையும் போது, பூமியின் நிழல் நிலவின் மீது படுவதால், முழுமையாக இருட்டாக தோன்றும். ஆனால், இன்றைய சந்திரகிரகணம் செந்நிறமாக தோன்றும். இது ஒரு அரிய நிகழ்வு. நிலவு, அதன் சுற்றுவட்டப் பாதையின், நெட்டச்சின் தொலை புள்ளியில் இருப்பதால், பூமியின் விளிம்பில் பட்டு வழிந்து வரும் சூரியனின் ஒளி நிலவின் மீது விழும்போது, நிலவு செந்நிறமாக காட்சி அளிக்கும். இதனால், நம் வெண்ணிலா, செந்நிலா (Red Moon / Blood Moon) என்று அழைக்கப் படுகிறது.
- இது இந்த 21-ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திரகிரகணம்.
- முழு கிரகணம் 1 மணி நேரம் 43 நிமிடங்கள் நீடிக்கும். கிரகணம் தொடங்கி, முழுமை அடைந்து பின், செந்நிறம், வெண்மையாக மாற மொத்தம் ஆறு மணி நேரம் ஆகும்.
- மொத்த கால அளவு: 22.44 மணி, 27-07-2018 (வெள்ளிக்கிழமை இரவு) முதல் 04.58 மணி, 28-07-2018 (சனிக்கிழமை அதிகாலை) வரை
- முழு செந்நிலா காட்சி அளிக்கும் நேரம் (முழு கிரகணம்): 01.00 மணி முதல் 02.43 மணி வரை 28-07-2018 (அதாவது 27-07-2018, வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்)