கோள்கள் – சூரியக் குடும்பம் (Planets in the Solar System)
நம் பூமி உட்பட சூரியனை மொத்தம் எட்டு கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றைப்பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
சூரியன்
சூரியக்குடும்பத்திலேயே மிகப் பெரியது சூரியன். இது ஒரு மிகச்சிறிய விண்மீன். இது முழுவதும் வாயுக்களால் ஆனது. சூரியனின் காந்தவிசை இக்குடும்பத்திலுள்ள அனைத்து கோள்கள் மற்றும் பிற பொருட்களை தன் புலத்திற்குள் வைத்துள்ளது.
- புதன் (மெர்குரி / Mercury)
- வெள்ளி (வீனஸ் / Venus)
- பூமி (எர்த் / Earth)
- செவ்வாய் (மார்ஸ் / Mars)
- வியாழன் (ஜூபிடர் / Jupiter)
- சனி (சாடர்ன் / Saturn)
- யுரேனஸ் (Uranus)
- நெப்டியூன் (Neptune)
1. புதன் (மெர்குரி / Mercury)
- சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் புதன் (மெர்குரி / Mercury).
- இது சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களிலேயே மிகச் சிறியது.
- இக்கோளுக்கு நிலாக்கள் ஏதும் இல்லை.
- இது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கால அளவு 88 நாட்கள். அதாவது, பூமியின் 88 நாட்கள் புதனின் ஒரு ஆண்டுக்குச் சமம்.
- சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், சூரியனின் பளிச்சிடும் ஒளிக்கிடையே இதைப் பெரும்பாலான நேரங்களில் காண முடியாது. ஆனால், அதிகாலையில் சூரியன் தோன்றும் முன்னர் அல்லது மாலையில் சூரியன் மறைந்த பின்னர், புதன் கோளைத் தொடுவானத்தில் பார்க்க முடியும்.
2. வெள்ளி (வீனஸ் / Venus)
- சூரியனிலிருந்து இரண்டவதாக உள்ள கோள் வெள்ளி (வீனஸ் / Venus).
- சூரியனைச் சுற்றும் கோள்களிலேயே அதிக வெப்பமான கோள் இது தான். ஏனெனில், இக்கோளில் நிறைந்துள்ள கார்பன் டைஆக்சைடு வாயு சூரியனின் வெப்பத்த அதிக அளவில் உள்வாங்கிக் கொள்கிறது.
- இது பூமிக்கு மிக அருகில் உள்ள கோள்.
- இரவில் அதிக அளவில் பளிச்சிடும் ஒளி வீசும் கோள் வெள்ளிதான்.
- இதற்கென்று நிலாக்கள் ஏதும் இல்லை.
- வெள்ளி தன் அச்சில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழல்கிறது. இதனால், வெள்ளியில் சூரியன் மேற்கில் தோன்றி, கிழக்கில் மறையும்.
- இது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கால அளவு 225 நாட்கள். அதாவது, பூமியின் 225 நாட்கள் வெள்ளியின் ஒரு ஆண்டுக்குச் சமம்.
- இது அதிகாலையில் சூரியன் தோன்றும் முன்னர் கிழக்கிலும், மாலையில் சூரியன் மறைந்த பிறகு மேற்கிலும் வானில் தோன்றும். இது விண்மீன் இல்லையென்றாலும், இதனை காலை விண்மீன் என்றும் மாலை விண்மீன் என்றும் அழைப்பர்.
3. பூமி (எர்த் / Earth)
- சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள் பூமி. சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தொலைவு ஏறத்தாழ 150,000,000 கி.மீ. (150 மில்லியன் கி.மீ). அதாவது 15,00,00,000 கி.மீ (15 கோடி கி.மீ).
- சூரியக் குடும்பத்தில் உயிர்கள் வாழும் ஒரே கோள் என்று கருதப்படுவது பூமி மட்டும்தான்.
- பூமியில் உயிர்கள் காணப்படுவதற்கான காரணங்கள்:
- சூரியனிலிருந்து தகுந்த தொலைவில் இருப்பதால், பூமியின் வெப்பநிலை உயிர்கள் வாழ்வதற்கேற்றவாறு உள்ளது.
- பூமியில் உள்ள நீர்
- உயிர்கள் வாழ்வதற்கேற்ற வளிமண்டலம் மற்றும் ஓசோன் அடுக்கு.
- பூமியை ஒரு நிலா சுற்றி வருகிறது.
- விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கும்போது நீலம் மற்றும் பச்சை நிறமாகக் காட்சி அளிக்கும். இதற்குக் காரணம், கடல் மற்றும் நிலப்பரப்பின் மீது விழும் சூரிய ஒளியின் எதிரொளிப்பே ஆகும்.
4. செவ்வாய் (மார்ஸ் / Mars)
- சூரியனிலிருந்து நான்காவதாகவும், பூமிக்கு அடுத்தபடியாகவும் உள்ள கோள் செவ்வாய் (மார்ஸ் / Mars).
- இது லேசான சிவப்பு நிறத்தில் உள்ளதால் சிவப்பு கோள் (Red Planet) எனவும் அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் செவ்வாயில் அதிக அளவில் இரும்பு ஆக்சைடு (Iron Oxide) உள்ளது.
- இது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கால அளவு 687 நாட்கள்.
- இதன் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் 0.375 பங்கு தான் உள்ளது.
- இதன் வளி மண்டலம் பெரும்பாலும் கார்பன் டை ஆக்சைடாலும் சிறிது நீராவியாலும் ஆனது.
- இதை இரண்டு நிலாக்கள் சுற்றி வருகின்றன.
5. வியாழன் (ஜூபிடர் / Jupiter)
- சூரியனிலிருந்து ஐந்தாவது இடத்தில் இருக்கும் கோள் வியாழன் (ஜூபிடர் / Jupiter).
- இது சூரியனைச் சுற்றி வரும் கோள்களிலேயே மிகப்பெரிய கோள் ஆகும். நம் பூமியைப் போல் 1300 பூமிகளை இதனுள் அடக்க முடியும்.
- வியாழனின் நிறை பூமியின் நிறையப் போல் 318 மடங்கு அதிகம்.
- இது ஒரு வாயுக்கோள். இதன் வளிமண்டலம் பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆனது.
- இதைச்சுற்றி தூசித் துகள்களாலான வளையங்கள் உள்ளன. ஆனால் அவை மங்கிய வளையங்களாதலால் அவற்றை பார்ப்பது கடினம்.
- வியாழனில் ஒரு நாள் என்பது 10 மணி நேரங்களைக் கொண்டது.
- இது சூரியனை ஒரு முறை சுற்றி வர 12 ஆண்டுகள் ஆகும்.
- 75-க்கும் மேற்பட்ட நிலாக்கள் வியாழனைச் சுற்றி வருகின்றன.
6. சனி (சாடர்ன் / Saturn)
- சூரியனிலிருந்து ஆறாவது இடத்தில், அதாவது வியாழனுக்கு அடுத்து இருக்கும் கோள் சனி (சாடர்ன் / Saturn).
- இது மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும்.
- வியாழனுக்கு அடுத்தபடியாக, சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் இரண்டாவது மிகப்பெரிய கோள் இது.
- சனியைச் சுற்றி அழகிய ஏழு வளையங்கள் உள்ளன.
- இக்கோளில் ஒரு நாள் என்பது 10.7 மணி நேரங்களைக் கொண்டது.
- இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 29 ஆண்டுகள் ஆகிறது.
- சனிக்கோளை 53 நிலாக்கள் சுற்றி வருகின்றன. மேலும் 29 நிலாக்கள் இதைச் சுற்றி வருவதாகக் கருதப்படுகிறது.
7. யுரேனஸ் (Uranus)
- சூரியனிலிருந்து ஏழாவது இடத்தில், அதாவது சனிக்கு அடுத்து இருக்கும் கோள் யுரேனஸ் (Uranus).
- வெள்ளியைப் (வீனஸ்) போல் யுரேனசும் கிழக்கிலிருந்து மேற்கில் தன் அச்சில் சுழல்கிறது.
- இது தன் அச்சில் மிக அதிகமாகச் சாய்ந்துள்ளது. இதனால், இது தரையில் உருண்டு செல்லும் பந்து போல் கிடைமட்டமாக, அதாவது பக்கவாட்டில் சுழன்றுகொண்டே சூரியனைச் சுற்றி வருகிறது.
- இது மிகப்பெரிய பனிக்கோள்.
- இதைச் சுற்றி 13 வளையங்கள் உள்ளன.
- இது பூமியைப் போல் 4 மடங்கு பெரியது.
- இக்கோளை 27 நிலாக்கள் சுற்றி வருகின்றன.
8. நெப்டியூன் (Neptune)
- இறுதியாக, சூரியனிலிருந்து எட்டாவது இடத்தில், அதாவது யுரேனசுக்கு அடுத்து இருக்கும் கோள் நெப்டியூன் (Neptune).
- இது தனது அச்சில் சுற்றிக்கொள்ள எடுத்துக் கொள்ளும் காலம் 17 மணி நேரம். அதாவது, இதன் ஒரு நாள் 16 மணி நேரத்துக்குச் சமம்.
- இது சூரியனைச் சுற்றிவர 165 ஆண்டுகள் ஆகிறது.
- இது 14 நிலாக்களைக் (துணைக்கோள்கள்) கொண்டது.
மீச்சிறு கோள்கள் (ஆஸ்ட்ராய்ட்கள் – Asteroids)
செவ்வாய்க்கும் வியாழனுக்கும் நடுவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மீச்சிறு கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவை மிகப் பெரிய பாறைகளால் ஆனவை. இந்த மீச்சிறு கோள் பட்டை (Asteroid Belt) சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களை இரண்டு குழுக்காளாகப் பிரிக்கிறது. புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கோள்கள் சூரியனுக்கும் இந்த மீச்சிறு கோள் பட்டைக்கும் இடையில் உள்ளன. இவை நான்கும் உட்கோள்கள் என அழைக்கப்படுகின்றன. மீச்சிறு கோள் பட்டைக்கு வெளியிலுள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய மற்ற நான்கு கோள்களும் வெளிக்கோள்கள் எனப்படுகின்றன.